மதுரை: பா.ஜ.க மற்றும் இதர இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கொலை செய்யப்பட்ட செய்தி அவ்வமைப்புக்களால் பிரச்சினை ஆக்கப்பட்ட பின்,
தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பலவற்றில் காணப்படும் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் கவலைக்குரியதாக உள்ளன.
குறிப்பாக ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக் காவல் படையினரின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டு காலமாகவே அப்பாவி முஸ்லிகள் பலரையும் பொய் வழக்குகளில் சிக்க வைப்பது, ஆண் துணை இன்றி தனியாக வாழ நேர்ந்த பெண்கள் உட்பட அப்பாவிகள் பலரை காவல்துறை உளவாளிகளாகச் செயல்படக் கட்டாயப்படுத்துவது, மதுரை நெல்பேட்டை முதலான இடங்களில் வசிக்கும் அடித்தள முஸ்லிம்கள் பெரும்பாலானோரை விசாரணை என்கிற பெயரில் அழைத்து அடித்துத் துன்புறுத்துவது, அவர்களது புகைப்படம் செல் போன் தொடர்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது என்பதாக உள்ளன.