இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி:-
சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு அவர்கள் முன்னேறுவதற்கான திட்டங்களை, சலுகைகளை வழங்குவதற்கு நமது நாட்டின் அரசியல் சாசன சட்டம் வகை செய்கிறது. இவ்வகையில்தான் எஸ்.சி/எ.,எஸ்.டி, பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினருக்கு சலுகைகள், மானியங்கள், இடஒதுக்கீடு போன்றவை வழங்கப்படுகின்றன.
இதே அடிப்படையில்தான் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கல்வியில் அவர்கள் முன்னேறும் பொருட்டு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. எந்த அரசும், எந்த கட்சியும் இதில் மதங்களை பார்ப்பதில்லை; எல்லா மதங்களை சேர்ந்த மாணவர்களும் இதில் பயனடைகின்றனர். ஆனால் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் சுய லாபத்திற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற பெயரில் மாபெரும் அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதாவது இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி மாணவர்களுக்கு மத்தியில் பிளவை , துவேசத்தை வளர்க்கும் வேலைகளை செய்து வருகின்றது.
கல்வி உதவி தொகை பெரும் தலித்துகள் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை இந்துக்கள் என ஏற்றுக்கொள்வதற்கு பா.ஜ.க தயாராக இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் பா.ஜ.கவின் முயற்சி அபாயகரமானது என்பதை உணர்ந்து இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும்.
எல்லா மாநிலங்களிலும் தமிழகத்தைப் போன்று தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மட்டும் இத்தகைய கீழ்த்தரமான போராட்டத்தை நடத்துவது, அரசியல் லாபத்திற்காக என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி உதவிக்தொகைக்காக அரசுகள் நிதி ஒதிக்கினாலும் அந்த நிதிகளை சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக பயன்படுத்தவில்லை. அந்த நிதிகள் போதுமானதாகவும் இருக்கவில்லை. விண்ணப்பிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை முறையாக கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை.
எனவே மத்திய மாநில அரசுகள் கல்வி உதவித் தொகைக்கு அதிக நிதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். உதவித் தொகையை அதிகரித்து வழங்கவேண்டும். இவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பா.ஜ.கவின் அவதூறு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி மாணவர்களிடையே ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 31 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும், சமூக ஒற்றுமையில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment