திருச்சியில் காணாமல் போன பள்ளி மாணவி தண்டவாளத்தில் உடல் சிதறி பிணமாக இறந்து கிடந்தார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபூப் நிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கு சென்ற தவ்பிக் சுல்தானா வெகு நேரமாகியும் வீடு திரும்பாத்தால், மாணவியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காவல்துறையில் முறையிட்டனர்.
இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இரட்டைமலை பகுதியில் ஆள் இல்லா ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் பள்ளி மாணவி ஒருவர் பிணமாக கிடப்பதாக மறுநாள் காலை காவல்துறைக்கு தகவல் வரவே, காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். துண்டு துண்டாகி கிடந்த உடலின் அருகே மாணவியின் அடையாள அட்டையும், அவரது புத்தக பையும் கிடந்தன. அடையாள அட்டையை சோதித்து பார்த்த போது அதில் தவ்பிக் சுல்தானா என்ற விபரம் இருந்தது. இதையடுத்து அந்த பள்ளிக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் கோரமாக கிடந்த தவ்பிக் சுல்தானாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ரெயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டாகி பிணமாக கிடந்த மாணவி, ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.
இது குறித்து பள்ளி மாணவிகளிடம் போலீசார் விசாரித்த போது, அவர் கடந்த 13ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வழக்கமாக செல்லும் பஸ்சில் ஏறாமல் வேறொரு பஸ்சில் ஏறிச் சென்றதும், இடையிலே அரிஸ்டோ ரவுண்டானா அருகே அவர் திடீரென இறங்கியதும் தெரிய வந்தது.
அங்கிருந்து தவ்பிக் சுல்தானா எப்படி இரட்டைமலைக்கு வந்தார்? அவரை யாரேனும் கடத்தி வந்தார்களா? அவரை யாரேனும் இந்த பகுதிக்கு அழைத்து வந்து வன்புணர்வில் ஈடுபட்டு விட்டு, பின்னர் கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றதால் உடல் துண்டானதா? அல்லது ரெயில் வரும் போது தள்ளி விடப்பட்டதில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மாணவியின் நோட்டுகளை சோதித்ததில், அதில் ஒரு கவிதையும், 2 செல்போன் எண்களும் எழுதப்பட்டு இருந்தன. அதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், நேற்று மாலை உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ரெயில்வேத்துறை காவலர்கள் முடிவு செய்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை நுழைவாயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் அபினவ்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “மாணவி சுல்தானாவை 2 வாலிபர்கள் அழைத்து சென்று வன்புணர்ந்து விட்டு பின்னர் கொலை செய்துள்ளனர். அந்த காமக்கொடூரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மாணவியின் உடலில் ஒரு கையையும், சில உறுப்புகளையும் காணவில்லை. அவற்றையும் தேடிக் கண்டு பிடித்து தந்தால் மட்டுமே உடலை வாங்கி செல்வோம். அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம். மேலும், விசாரணையில் கிடைத்துள்ள செல்போன் எண்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க வேண்டும்.” என்றார்கள்.
இதையடுத்து துணை ஆணையர் அபினவ்குமார்; “சம்பந்தப்பட்ட இடத்தை நான் பார்வையிட்டு 2 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தினேன். 8ஆம் வகுப்பு மாணவி அவ்வளவு தூரம் தனியாக சென்றது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி மாயமானது தொடர்பாக பாலக்கரை காவல்துறையினரும், உடல் கிடந்த இடத்தை வைத்து ரெயில்வேத்துறை காவலர்களும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையை மேலும் துரிதப்படுத்த வேண்டி, துணை ஆய்வாளர் அக்பர்கான் தலைமையில் ரெயில்வேத்துறை காவலர்களைக் கொண்டு ஒரு தனிப்படையும், மாநகர காவர்களைக் கொண்டு ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். ரெயில் ஏறி இறங்கியதில் உடலின் பாகங்கள் பல துண்டாகி விட்டன. இதில் ஒரு கையும், சில உறுப்புகளும் கிடைக்காதது குறித்து ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. ரெயில்கள் ஏறி இறங்கியதால் உருக்குலைந்து போய் இருக்கும்.” என்றார்.
இதையடுத்து இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே அனைவரும் கலைந்து செல்லவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாநகர துணை ஆணையர் அபினவ்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் சுல்தானா நோட்டில் எழுதிவைத்திருந்த இரண்டு மொபைல் எண்களை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் காஜாமலையை சேர்ந்த உமர் ஃபாரூக் அவருடைய நண்பர்களான பொன்மலைப்பட்டியை சேர்ந்த வினோத்குமார், எ.புதூரை சேர்ந்த விக்ணேஷ், சிவா, சரவணன் ஆகிய 5 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுல்தானாவுடன் காஜாமலை உமர்பாரூக் பழகி வந்துள்ளனர் என்றும், கடந்த 13ம் தேதி பாரூக்கின் நண்பர் ஒருவர் பாரூக் பேச அழைக்கிறார் என்று கூறி பைக்கில் சுல்தானாவை இரட்டைமலை கோயிலுக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு கூடிய 5 பேரும் சுல்தானாவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து தனது அம்மாவிடம் சொல்லப்போவதாக தெரிவித்த சுல்தானாவை கல்லால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் நள்ளிரவில் தண்டவாளத்தில் படுக்கவைத்து விட்டு சென்றுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிடிப்பட்ட இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
Info: New india.tv
0 கருத்துரைகள்:
Post a Comment