Tuesday, August 20, 2013

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வழிமுறையே போதுமானது: பாப்புலர் ஃப்ரண்ட்



கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ராஜ்ய சபாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் (மீளாய்வு) 2012ல் மதங்களுக்கு அப்பாற்பட்டு கட்டாயமாக அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. எனினும் ஏற்கனவே அமுலில் உள்ள வேறு ஏதேனும் சட்டங்களுக்குட்பட்டு திருமணங்கள் பதிவு செய்வதாயிருப்பின், அத்தகையவர்களுக்கு இந்த சட்ட திருத்தம் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது நாட்டில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தினரின் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முஸ்லிம் தனியார் சட்டமே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24.11.2009 முதல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009யின் அடிப்படையில் அனைத்து மதத்தவர்களும் திருமணங்களை கட்டாயமாக அரசு பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.


பின்னர் ஆகஸ்ட் 29, 2010யில் சிறிய அளவில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும் முஸ்லிம்கள் விஷயத்தில் ஏற்கனவே அனைத்து திருமணங்களும், முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வருவதால், மாநில அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தினால், முஸ்லிம்கள் மீண்டும் ஒரு திருமண பதிவை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்து வருகிறது.

முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு திருமண பதிவு அவசியமற்றது என்று பல தருணங்களில் அரசின் கவனத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கொண்டு சென்றுள்ளது.

ஆகவே தமிழக முஸ்லிம்களுக்கு சற்று ஆறுதள் அளிப்பதாக உள்ள, கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை முன்னிட்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009ல், முஸ்லிம்களின் திருமண பதிவை  முஸ்லிம் தனியார் சட்ட வழிமுறைப்படியே வழங்கி ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஏ.எஸ்.இஸ்மாயில்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
-Info: popularfornttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza