Monday, August 19, 2013

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் எகிப்து மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!



எகிப்தின் கெய்ரோ நகரத்தின் ரம்ஸீஸ் சதுக்கத்திற்கு அருகில் உள்ள ஃபத்ஹ் மஸ்ஜிதில், ஜனநாயகத்தை மீட்டெடுக்க தர்ணா போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது எந்திர துப்பாக்கிகளை பிரயோகித்து சரமாரியாக சுட்டு வீழ்த்திய எகிப்திய ராணுவம், இழந்த சிறப்பு அதிகாரங்களை மீண்டும் கைவசப்படுத்துவோம் என்று பிரகடனப்படுத்தியுள்ளது.
2012-ஆம் ஆண்டு ஜனநாயகரீதியாக எகிப்தின் வரலாற்றில் நடந்த முதல் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்று அதிபரான முஹம்மது முர்ஸிக்கு எதிராக மேலை நாடு ஒன்றின் வெளிப்படையான, மறைமுகமான ஆதரவுடன் நடந்தேறியது ராணுவப் புரட்சி.

இந்த அராஜகத்திற்கு எதிராக எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை, முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தும் வரை, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறி லட்சக்கணக்கான மக்கள் நடத்தும் போராட்டம், சர்வாதிகார ராணுவம் மற்றும் அற்ப சுகங்களுக்காக அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் சிவிலியன் கோமாளிகளின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளன.
கடந்த தினங்களில் மட்டும் நடந்த கூட்டுப் படுகொலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வாதிகார அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் கூறுகிறது. உண்மையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக முஸ்லிம் சகோதரத்துவப் பேரவை தலைவர்கள் கூறுகின்றனர்.
சொந்த பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு பிறரிடம் வீதிகளில் இறங்கி போராட கட்டளையிடுபவர்கள் மத்தியில் போராட்டக்களத்தில் தங்களையும், தங்களது சொந்த பிள்ளைகளையும் இழந்துள்ளனர் முஸ்லிம் சகோதரத்துவ பேரவையின் தலைவர்கள்.
அந்த அமைப்பின் ஸ்தாபகரான மறைந்த இமாம் ஹஸனுல் பன்னாஹ்வின் பேரன் காலித் பர்னாஸ், தற்போதைய தலைவர் முஹம்மது பதீஃகின் மகன் அம்மார் பதீஃ, மூத்த தலைவர் பெல்தாகியின் மகள் அஸ்மா பெல்தாகி ஆகியோர் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானவர்கள் ஆவர்.
கடந்த புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பை நோற்றுக்கொண்டு ராபிஆ அல் அதவிய்யா மஸ்ஜிதிலும், கெய்ரோ நகரத்தின் இதர பகுதிகளிலும் அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்திவந்தார்கள்.
முன்னதாக ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகள் நீண்ட சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு குறைந்தது ஐந்து தடவையாவது மக்களின் ஆதரவை உறுதிப்படுத்திய பிறகே டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்து அதிபரானார்.
முபாரக் ஆட்சிக்கு எதிரான எகிப்தின் மக்கள் புரட்சியானது ‘அரபு வசந்தம்’ என எல்லோராலும் பேசப்பட்டது. ஆனால் அரபு வசந்தம் என்பது வெறுமொரு வெளியில் பூசப்பட்ட வர்ணம் மட்டுமே என்றும், ராணுவமும், பாதுகாப்பு ஏஜன்சிகளும் ஒருபோதும் திரும்பிப் போகவில்லை என்றும் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேற்கத்தியர்களையும், நாட்டை குடும்பச் சொத்தாக மாற்றி அனுபவித்து வரும் சர்வாதிகார ஆட்சியாளர்களையும் பாதுகாக்கும்போது மட்டுமே அரபுலகில் ஜனநாயகத்திற்கும் இடம் உண்டு என்பதை எகிப்தின் வீதிகளில் ஓடும் இரத்தம் நிரூபிக்கிறது.
1980ஆம் ஆண்டு துருக்கியிலும், 1992-ஆம் ஆண்டு அல்ஜீரியாவிலும் ஜனநாயகம் டாங்குகளின் கீழ் நசுக்கப்பட்டதை அறிந்தவர்களுக்கு எகிப்தில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.
ஆனால், மேலை நாடு ஒன்றின் உத்தரவுகளையும், வளைகுடா நாடுகளின் எஜமானர்களிடமிருந்து லஞ்சத்தையும் பெற்றுவரும் அப்துல் ஃப்த்தாஹ் அல் ஸீஸியும், அவரது அடியாட்களும் எத்தனை நாட்களுக்குத்தான் இறந்த உடல்களின் மீது சவாரிச் செய்வார்கள்?
எந்திரத் துப்பாக்கிகளாலும், கவச வாகனங்களாலும் சுதந்திர தாகத்தை அடக்கி ஒடுக்கிவிட முடியுமா? என்று உலகம் உற்று நோக்குகிறது.
சேகுவரா ஒரு முறை சொன்னதுபோல், மக்களை அவர்கள் சாகடிக்கலாம், ஆனால் புரட்சியை தோற்கடிக்க முடியாது. ஆகையால், ஜனநாயகத்தை மீட்டெடுக்க எகிப்து மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் முழு ஆதரவையும் அளிக்கவேண்டும்.

-Info: New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza