Saturday, August 17, 2013

ராணுவத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத எகிப்து மக்கள்! - மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக்களம்!



ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான கொடூர தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலைச் செய்யப்பட்ட பிறகும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் எகிப்தில் மக்கள் போராடி வருகின்றனர்.
நேற்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அவசர நிலையை பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எத்தனை பேர் உயிர்களை இழந்தாலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் வரை ஓயமாட்டோம் என்று முஸ்லிம் சகோதரத்துவ பேரவை இயக்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நேற்று ராணுவத்துடன் நடந்த மோதலில் கெய்ரோவில் மட்டும் 80 பேர் கொல்லப்பட்டனர். ராணுவம் மற்றும் போலீசின் துப்பாக்கிச்சூட்டில் இஸ்மாயிலிய்யா உள்ளிட்ட பகுதிகளில் 12 பேர் கொல்லப்பட்டனர். கெய்ரோவில் ராம்ஸஸ் சதுக்கத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த மக்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து காட்டுமிராண்டி ராணுவத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இஃவானுல் முஸ்லிமீனின் அழைப்பை ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று ராம்ஸஸ் சதுக்கம் நோக்கி பேரணி நடத்தினர். நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்களை நீக்கம் செய்ய சர்வாதிகார ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 638 பேர் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ பேரவை அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கண்டால் சுட போலீசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணுவ புரட்சியை முறியடிப்போம் என்று முழக்கமிட்டு நேற்று மக்கள் வீதிகளில் இறங்கினர். ராணுவம் நடத்திய இரத்தக்களரி தங்களுடைய உறுதிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ பேரவையின் செய்தி தொடர்பாளர் கஹத் அல் ஹத்தாத் தெரிவித்துள்ளார்.
முன்னர் ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தின் மையமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் திரளாமல் இருக்க ராணுவம் அப்பகுதியை சீல் வைத்துள்ளது.
நஸ்ர் சதுக்கத்தில் ஈமான் மஸ்ஜிதில் தயார் செய்த தற்காலிக மார்ச்சுவரி இறந்த உடல்களால் நிரம்பியுள்ளது. பல உடல்களும் எரிந்த நிலையில் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளது.
எகிப்து முழுமையான உள்நாட்டுப் போரை நோக்கி நகருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன. ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
டென்மார்க், எகிப்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் நாடுகளில் உள்ள எகிப்தின் தூதர்களை அழைத்து பிரான்சும், பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்துமாறு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் அழைப்பு விடுத்துள்ளார்.
வீதிகளில் சிவிலியன்களை கொலைச் செய்வது தொடரும் எகிப்துடன் பாரம்பரிய ஒத்துழைப்பை அளிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஆனால், எகிப்து ராணுவத்திற்கு அமெரிக்கா அளித்து வரும் 130 கோடி டாலர் உதவித்தொகை ரத்தாகுமா? என்பதுக் குறித்து ஒபாமா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முர்ஸியை வெளியேற்றியது ராணுவப் புரட்சி என்றும் ஆகையால் எகிப்திற்கான உதவியை அமெரிக்கா வாபஸ் பெறவேண்டும் என்றும் அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சார்ந்த செனட்டர் ஜான் மெக்கய்ன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Info: New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza