Thursday, August 15, 2013

எகிப்தில் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்: 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை!



எகிப்தில் ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது சர்வாதிகார ராணுவ அரசு நடத்திய கொடூரமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
கெய்ரோவிலும், அருகில் உள்ள நகரங்களிலும் அமைதியான முறையில் பல தினங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம்களை நீக்கம் செய்ய வந்த ராணுவம் நிராயுதபாணிகளான மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. எத்தனை பேர் மரணித்தார்கள் என்பது குறித்த தெளிவான புள்ளிவிபரம் வெளியாகவில்லை. குறைந்தது 2,200 பேராவது மரணித்திருப்பார்கள் என்று போராட்டத்திற்கு தலைமை வகித்த இஃவானுல் முஸ்லிமீனின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதேவேளையில் 149 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், 1403 பேர் காயமடைந்ததாகவும் சர்வாதிகார அரசின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
தற்காலிக முகாம்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஒரு மாதம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக இடைக்கால சர்வாதிகார அரசின் அதிபர் அட்லி மன்சூர் அறிவித்துள்ளார்.
இஃவானுல் முஸ்லிமீனின் தலைவர்களில் ஒருவரான பெல்தாகியின் மகள் 17 வயது அஸ்மா பெல்தாகியும் பலியாகியுள்ளார்.
யு.ஏ.இயின் பிரபல ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூசின் செய்தியாளர் ஹபீபா அஹ்மது அப்துல் அஸீஸ் (வயது 26) உள்பட மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலையில் கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்களுடன் வந்த ராணுவம் இந்த அட்டூழியத்தை ராபிஅத்துல் அதவியா மஸ்ஜிதுக்கு அருகே நிகழ்த்தியுள்ளது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாபஸ் பெற மறுத்ததை தொடர்ந்து ராணுவம் தனது வெறியாட்டத்தை துவக்கியது. காயமடைந்த ஏராளமானோரை ராணுவம் இழுத்துச் செல்லும் காட்சியை சானல்கள் வெளியிட்டுள்ளன.
ராபிஅத்துல் அதவிய்யா மஸ்ஜிதுக்கு அருகே உள்ள தற்காலிக மருத்துவமனை காயமடைந்தவர்கள் மற்றும் பலியான உடல்களால் நிரம்பியுள்ளது. ராணுவத்தின் அட்டூழியத்தை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு தலைவர் காதரின் ஆஷ்டன், பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் ஆகியோர் கண்டித்துள்ளனர். மெளனிகளான நாடுகள் கூட்டுப் படுகொலைக்கு துணைபோனதாக துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே கூட்டுப் படுகொலைகளை கண்டித்து எகிப்தின் சர்வாதிகார அரசின் துணை அதிபராக பதவி வகித்த முஹம்மது அல் பராதி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் தொடர இயலாது என்று அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza