Sunday, August 4, 2013

எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகம் மீது குண்டு வீசி தாக்குதல்!

கேரளா: எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள தலைமை அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள தலைமை அலுவலகம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்து கல் வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணாடிகள் உடைந்த சப்தம் கேட்டு அப்பகுதியில் மக்கள் கூடியதும் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தலைமறைவாகினர்.

இதன் பின்னர் காலை 6 மணியளவில் மீண்டும் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவர்களைப் பிடிக்க துரத்திய பொது மக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய அவர்கள், வாகனங்களில் விரைந்து தலைமறைவாகினர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு அதிகமானது. தலைமை செயலகம் அருகில் உள்ளதால், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு கடுமையாக இருக்கும். இருப்பினும் காலை நேரத்தில் துணிச்சலாக நடந்த இத்தாக்குதல் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கரமனை பகுதியிலிருந்து தலைமை செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர். இப்பேரணியினைப் புளிமூடு சந்திப்பு அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலேயே போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர், பின்னர் தாக்குதல் தொடர்பாக காவல்துறையில் புகாரளித்தனர்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. காவல்துறை உறுதியளித்தப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையேல், கேரளம் முழுவதும் போராட்டம் விரிவாக்கப்படும் என எஸ்.டி.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
Info : Inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza