கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களில் போலீசாரும் அடங்குவர்.
தாக்குதலில் பல வீடுகளும் வாகனங்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை தொழுகைக்குப் பின்னர், மஸ்ஜிதுக்கு ஆயுதங்களுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இருதரப்பிலும் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து பிரதேசத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசின் சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
சுவர்ண சைத்திய வீதியில் பழைய மஸ்ஜிதுக்கு பதிலாக, மதவிவகார அமைச்சகத்தின் அனுமதி பெற்று கட்டப்பட்ட புதிய மஸ்ஜிதை திறக்கவிடாமல் புத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக கடந்த மாதங்களில் புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் புத்த சாமியார்களுக்கும் இடையில் சமரசத்தை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாரும் கூறிவந்தனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் மீண்டும் திறக்கப்பட்ட இந்த மஸ்ஜிதுக்கு நண்பகல் முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் போலீசாரின் காவலையும் மீறியே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மஸ்ஜித் மீதும் அருகிலுள்ள வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இருதரப்பிலும் மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. பிரதேசத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக போலீஸ் கூறுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment