பகுதி-3
ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?
இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில்: இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். அடுத்தது: வரலாற்று ரீதியாய் முஸ்லிம்களை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது. இதனை முன்பே விளக்கியுள்ளோம். கடைசியாக: இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்.
கிறிஸ்தவம் உட்படப் பிற மதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை ஒப்பீட்டு அளவில் வென்று நின்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குரு கோல்வால்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்குச் சவாலாய் இருந்தது” என வயிறெரிந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தைப் பேணுபவை. இமாசலப் பிரதேச மாநிலப் பாரதிய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று மணலி என்ற இடத்தில் மனு கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாகக் கருதாமல் வேறென்ன செய்வார்கள்?