Sunday, October 21, 2012

இனி இதயமும் விலைக்குக் கிடைக்கும்!


இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மாற்று இதயம் தேவைப்படுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது செயற்கை இதயம்

ண்டுதோறும் இதயக் கோளாறால் இறக்கும் நாற்பது லட்சம் இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது மும்பை மருத்துவமனை. பல்வேறு இதயக் கோளாறுகளால் மாற்று இதயம் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் உறுப்பு தானத்திற்காக இனி காத்திருக்கத் தேவையில்லை. மும்பை தி ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் நானூறு கிராம் எடையில் ஒரு செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது. இதைப் பொருத்திக் கொண்டால் இதுவரை இதயம் செய்த பொறுப்பை செயற்கை இதயம் எடுத்துக் கொள்ளும்.


தி  ஏஷியன்   ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டின் உதவித் தலைவர் டாக்டர் ராம்காந்த் பாண்டா, ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதய மாற்று தேவைப்படுபவர்களில்ஒரு சதவிகிதப் பேருக்கும் குறைவாகவே இதய தானம் கிடைக்கிறது. இயற்கையான இதயத்தைப் போலவே இருக்கும் இந்த செயற்கை இதயத் தொழில்நுட்பம் மாற்று இதயம் கிடைக்காதவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். செயலிழந்த இதயத்திற்கு மாற்றாக மட்டுமே இந்த செயற்கை இதயம் இல்லை. இதைப் பொருத்திய பிறகு 10லிருந்து 15 சதவிகித நோயாளிகளின் பழுதடைந்த இதயம் சீராகி உள்ளது. அதன்பின் இந்த செயற்கை இதயத்தை எடுத்து விடலாம்.

மாற்று இதயம் பொருத்துவதற்கான வாய்ப்புள்ள அனைவருக்கும் இந்த செயற்கை இதயத்தைப் பொருத்தலாம்.  உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேர் செயற்கை இதயம் பொருத்தியுள்ளார்கள். இதைப் பொருத்திய பிறகு வழக்கமாக ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது என்று அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். நீந்துவது மட்டும் செய்யக் கூடாது. செயற்கை இதயம் எப்போதும் இயற்கையான இதயத்திற்கு மாற்றாக ஆக முடியாது. ஆனால் இயல்பான செயல்பாடுகளில் தடங்கல் ஏற்படும்போது அந்த வேலைகளை செய்வதற்கான மாற்று இந்த இதயம்" என்கிறார்.

செயற்கை இதயம் உதரவிதானத்தின் (diaphragm) கீழ் இதயத்தோடு சேர்த்து பொருத்தப்படுகிறது. பாட்டரியில் இயங்கும் செயற்கை இதயத்தை ஒவ்வொரு 12 முதல் 14 மணி நேரத்திற்கும் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.  மாற்று இதயம் கிடைக்காதவர்கள் தவிர இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள கருவி. இதிலுள்ள சாதகமான விஷயம், மாற்று உறுப்பு பொருத்தும்போது சில சமயங்களில் நம் உடல் அந்நிய உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. இதனால் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். அந்தப் பிரச்சினை இதில் இருக்காது. தி ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் தவிர பெங்களூரூவில் நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கு செயற்கை இதயம் பொருத்துவதற்கான அங்கீகாரம் சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு இங்கு 4 பேருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

எல்லாம் சரி... ஆனால் செயற்கை இதயம் பொருத்த ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய்.சில ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் முதன்முறையாக 54 வயது வெங்கட கிருஷ்ணாலா என்பவருக்கு பெங்களூரூ நாராயண ஹிருதாலயா மருத்துவமனையில் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இம்மருத்துவமனையின் இதய அறுவைச்சிகிச்சை டாக்டர்  டி.ஆர்.ராஜேஷ், இதய மாற்று அறுவைச்சிகிச்சையா, செயற்கை இதயமா என்று நோயாளிகளிடம் கேட்டால் அனைவரும் செயற்கை இதயத்தையே தேர்வு செய்கிறார்கள். காரணம், அறுவைச் சிகிச்சைக்குப் பின் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் இதில் மிகக் குறைவு. செயற்கை இதயம் பொருத்த ஒரு கோடி செலவு ஆகும் என்றாலும் நாங்கள் செயற்கை இதயத்தின் விலையான 50 லட்சத்தை மட்டுமே வாங்குகிறோம். அறுவைச்சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இன்னும் 10 ஆண்டுகளில் இதயத் தேவை அதிகரித்து உற்பத்தி பெருகும்போது விலை சில லட்சங்களாகக் குறைந்துவிடும்" என்று நம்பிக்கை தருகிறார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza