வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் பதவியில் நீடிக்கும் வரை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பூண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே தொலைக்காட்சியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு விவாதங்களுக்குப் பிறகு மிட் ரோம்னியின் கை சிறிது ஓங்கியிருந்தது.
மூன்றாம் கட்டமாக நடந்த விவாதத்தில், “நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரையில் ஈரானுக்கு ஒரு அணு ஆயுதம் கூட கிடைக்க விடமாட்டேன்” என்று பராக் ஒபாமா கூறினார்.
மேலும், இஸ்ரேல் தங்களுடைய உண்மையான நண்பன் என்றும், தங்களுடைய பகுதியின் மிகப் பெரிய நட்பு நாடு என்றும் கூறி தன் இஸ்ரேலிய பாசத்தை வெளிப்படுத்தினார்.
இஸ்ரேல் தாக்கப்பட்டால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தோள் கொடுக்கும் தோழனாகத் திகழும் என்பதை தான் அதிபர் ஆன காலம் முதல் தெளிவு படுத்தி உள்ளதாக ஒபாமா கூறினார்.
முன்னதாக “அணு ஆயுத ஈரான் உலகிற்கு ஒரு மிக பெரிய அச்சுறுத்தல்” என்றும், அது ஒபாமாவின் பயங்கரவாதக் கட்டமைப்புக்கு எதிராக உள்ளது என்றும் ரோம்னி தனது விவாதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த மூன்றாம் கட்ட விவாதத்திற்குப் பிறகு, ஈரான் குறித்த “புரட்சிகர” கருத்துகளை திருவாய் மலர்ந்ததற்குப் பிறகு ஒபாமாவின் கை சிறிது ஓங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment