Monday, October 29, 2012

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை அமுலாக்க முயற்சிகள் எடுக்கப்படும்: அமைச்சர் ரஹ்மான்கான்

k.rahman khan
புது தில்லி:சச்சார் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக புதிதாகப் பதவி ஏற்றுள்ள கே.ரஹ்மான் கான் கூறினார்.
மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுளளனர்.
சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுவதைத் தடுப்பதற்கும், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும் பாராளுமன்றத்தில் எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய சுரங்க மசோதா கொண்டு வந்து சட்டமியற்ற முயற்சி செய்யப்படும் என்று சுரங்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தின்ஷா படேல் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்த வளர்ச்சிப் பணிகளைத் தான் தொடரப் போவதாக புதிதாகப் பொறுப்பேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். பள்ளம் ராஜு கூறினார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசி தரூர், ஐ.பி.எல். முறைகேடு விவகாரத்தால் கடந்த 2010ம் ஆண்டு தமது வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
கேரள மாநிலம் மாவேலிக்கரா தொகுதி எம்.பி.யான கொடி குனில் சுரேஷ், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இவர் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரிக் அன்வர் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான தாரிக் அன்வர், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
ஆந்திர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர ரெட்டியின் மகன், சூர்ய பிரகாஷ் ரெட்டி ரயில்வே துறை இணை அமைச்சராரகப் பொறுப்பேற்றுள்ளார். கர்நூல் தொகுதி எம்.பி.யான சூரிய பிரகாஷ் ரெட்டி, நான்கு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்..
அஸ்ஸாம் மாநிலம், லக்கிப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரானி நாரா, பழங்குடியின மக்கள் விவகாரத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் கிரிக்கெட் அசோஸியேஷனுக்குத் தலைவராக உள்ள ராணி நாரா மேலும் பல அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாரம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் செளத்ரி ரயில்வே துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மால்டா தொகுதி எம்.பி.யான ஏ.எச். கான் சௌத்ரி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.
ஆந்திர மாநிம் மாடிகா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வி சத்திய நாராயணா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
அருணாசல் பிரதேச மாநிலம், கிழக்கு அருணாச்சல் தொகுதி எம்.பி.யான நினோங் எரிங், சிறுபான்மையினர் விவகாரத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் 5 முறை நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தாஸ் முன்சியின் மனைவி தீபா முன்சி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் தொகுதியிலிருந்து இவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் தெலுங்கானா தொகுதி எம்.பி.யான பொரிகா பல்ராம் நாயக், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ காகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க்ருபாராணி கில்லி, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் புறநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லால்சந்த் கட்டாரியா பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். புதிய இணை அமைச்சர்கள் விவரம் வருமாறு:
சசி தரூர் – மனிதவள மேம்பாட்டுத் துறை
கொடி குனில் சுரேஷ் – தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை
தாரிக் அன்வர் – விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல்
சூர்ய பிரகாஷ் ரெட்டி – ரயில்வே துறை
ரானி நாரா – பழங்குடியின மக்கள் விவகாரத்துறை
ஆதிர் ரஞ்சன் செளத்ரி – ரயில்வே துறை
கான் சௌத்ரி – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
சர்வி சத்தியநாராயணா – சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
நினோங் எரிங் – சிறுபான்மையினர் விவகாரத் துறை
தீபா முன்சி – நகர்ப்புற மேம்பாட்டுத் துறை
பொரிகா பல்ராம் நாயக் – சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
க்ருபாராணி கில்லி – தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
லால்சந்த் கட்டாரியா – பாதுகாப்புத் துறை

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza