Monday, October 22, 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-2

                      பகுதி-2

ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.

தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது.எனவே முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது




இன்னொன்றையும் நீங்கள் வரலாற்று ரீதியாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகைக் கணக்கீடும் (1891) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் எனத் தனித் தனியே விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருந்தால் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய், தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்திருந்ததை இந்துத் தலைவர்கள் உணர்ந்தனர். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர். 


ஒன்று : தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவது. 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்ற கருத்தை ஆர்ய சமாஜிகளும் இதர சனாதனிகளும் எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதித் தலைவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். இறுதியாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து மகாசபை, “இருந்தாலும் அவர்கள் ‘யஞ்ஞோபவீதம்’ (பூணூல்) அணியக்கூடாது” என அறிவித்தது. 

இரண்டு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனி நாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் ‘இந்து ராஜ்யம்’ அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர். உண்மைஇப்படி இருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனச் சொல்வது அபத்தம்.

 

அப்படியானால் நாட்டுப் பிரிவினையில் முஸ்லிம்கள்ளுக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா?


இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு என்றால் அதில் தாங்கள் தலைமை ஏற்க முடியும் என இந்து ஆதிக்கச் சக்திகள் நினைத்தது போலவே முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்றால் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடீயும் என முஸ்லிம் மேல்தட்டினரும், முஸ்லிம் லீக் தலைவர்களும் நினைத்தனர். ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரிவினைவாதி என்றோ, முஸ்லிம் மதத் தலைவர்கள் (உலமாக்கள்) பிரிவினை வாதத்தை முன் வைத்து முஸ்லிம்களைத் தங்களின் கீழ்த் திரட்டினர் என்றோ கருத வேண்டியதில்லை. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் வெள்ளையராட்சியை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை முன்பே குறிப்பிட்டேன். 

1857 சுதந்திரப் போர் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் மவுல்விகளான அகமதுல்லாஷா, இனாயத் அலி போன்றோர் நானாசாகேப், ஜான்சிராணி ஆகியோரோடு இணையாகப் போற்றப்படுகின்றனர். 1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சர் சையத் போன்ற இஸ்லாமிய மேல்தட்டினர் காங்கிரசில் சேர வேண்டாம், ஆங்கிலேய ஆட்சிக்குச் சார்பாக இருந்து முஸ்லிம்களுக்குச் சலுகைகள் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியபோது முஸ்லிம் மதத்தலைவர்களான மவுலானா ரஷீத் அலி காங்கோய் போன்றோர், “காங்கிரசில் சேர்ந்து இந்துச் சகோதரர்களுடன் போராடுங்கள்” என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தத் தன்மை கடைசிவரை தொடர்ந்தது. ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாகக் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை எதிர்ப்பது என்பதும் தொடர்ந்தது. 

மத அடிப்படையிலும் உலமாக்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஆதரவு காட்டினர். கூட்டுத் தேசியத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. முகம்மது நபி அவர்களே மதினாவிற்குச் சென்றவுடன் பிற மதத்தினருடன் கூட்டுத் தேசியத்தை வலியுறுத்தினார். ஜமாத் லைவராக இருந்த மவுலானா உசேன் அகமத் மதானி, “தேசம் (குவாம்) என்பது நில எல்லைத் தொடர்பான கருத்தாக்கம். ‘உம்மாஹ்’ அல்லது ‘மிலாத்’ என்பது மதம் தொடர்பான கருத்தாக்கம். இரண்டையும் குழப்ப வேண்டியதில்லை. ஒருநில எல்லைக்குள் இரு மதத்தினர் இணைந்து வாழ்வதென்பது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானதல்ல” என்றார்.

சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா?



சர் சையத் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக வெவ்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி, காங்கிரசை எதிர்த்தனர் என்பது சர் சையத் போன்றோர் மட்டும் செய்த காரியமல்ல. பல பிரிவினரும் இதைச் செய்துள்ளனர். நமது நீதிக்கட்சி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் கூட இந்நிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது நான் சொல்ல வருவது இதுதான். 

ஒன்று: ஆதிக்கச் சக்திகள் அவர்கள் – முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி – தங்களின் நலன் நோக்கில்தான் செயல்படுகின்றன. முஸ்லிம்களை மட்டும் சுட்டிக்காட்டி எதிர்ப்பது அபத்தம். 

இரண்டு: முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி செயல்படுபவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம்கூட அவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய கட்டுக் கதைகளில் ஒன்றுதான். முஸ்லிம்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. அரசியல் சக்திகளது கருத்தும் மதத் தலைவர்களது கருத்தும் எல்லாக் காலங்களிலும் ஒத்துப்போனதில்லை. பலரும் நினைப்பது போல முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் பிரிவினைவாதிகள் இல்லை. தவிரவும் மிகவும்பின்தங்கிய நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத்தை நவீனப்படுத்துவது, புதிய ஆங்கிலக் கல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்வது, புதிய பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்குவது என்றெல்லாம் சையத் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெறும் ஆங்கில ஆதரவு நடவடிக்கையாகப் பார்த்துவிட முடியாது.



 இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?


வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான். ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம். வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன. தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை. எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்¤தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும்இதன் மூலம் பொருளாகிறது. ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர். பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர். 

வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன. பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன. இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர். பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன. இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.




 கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாமானதுதானே?



காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும். 1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத் தொகையில் 77 சதம் பேர் முஸ்லிம்கள். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக் கெதிராக 1931ல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது. இந்தப் பின்னணியில் 1939ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப்பட்டது. இக் கட்சியின் சார்பாகப் பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’Õ கோரிக்கை 1944ல் முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1945ல் “டோக்ரா மன்னர்களே வெளியேறுங்கள்” போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947ஆக.15ல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. 

மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் “மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப் படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என இந்திய அரசு (அக். 5, 1947) அறிவித்தது. ராஜ அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளை அனுப்பிக் காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார். 

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை. இந்த அடிப்படையில் இந்திய-பாக். போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது. இந்தப் பின்னணியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன. 1, 1948 அன்று அய்.நா. அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்றது. ஜன. 20, 1948 அன்று பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்சினையை ஆராயக் குழு ஒன்றை நியமித்து. அந்த அடிப்படையில் ஆக.13, 1948 அன்று காஷ்மீர் தீர்மானத்தை அய்.நா. நிறைவேற்றியது. போர் ஓய்வு, இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் கணிப்புத் தேர்தல் நடத்துவது என்கிற மூன்று அம்சங்களை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. 

அய்.நா. இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் போதே காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய அவை ஒன்றை இந்தியா அமைத்தது. “அரசியல் சட்ட உருவாக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி அந்த மக்கள் பிரிந்து போக விரும்பினால் அந்த விருப்பம் நிச்சயமாய் நிறைவேற்றப்படும். இந்த அரசியல் நிர்ணய சபை அதற்குத் தடையாக இராது” என இந்திய அரசு (நவ. 21, 1949) வாக்களித்தது. 370வது பிரிவு ஒன்றை உருவாக்கிக் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர பிற அம்சங்களில் சுயாட்சி உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டன. 

370வது பிரிவு பற்றி என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் நிர்ணய அவையில் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார்: ‘காஷ்மீரில் இன்னும் போர் நீடிக்கிறது. சில பகுதிகள் எதிரிகள் வசம் உள்ளன. அய்.நா.அவையும் இதில் தலையிட்டுள்ளது. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசு சில உறுதிகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 370வது பிரிவின் மூலம் சில சிறப்புரிமைகளை காஷ்மீர மக்களுக்குத் தருவது தவிர்க்க இயலாது”. 

இதுதான் 370வது பிரிவு உருவான கதை. கணிப்புத் தேர்தலை இந்திய அரசு வஞ்சகமாக முறியடித்ததுதான் தவறேயொழிய 370வது பிரிவைச் சேர்த்ததை எப்படித் தவறாகச் சொல்ல முடியும்? சொல்லப் போனால் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட உரிமைகள் இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாமும் கோருவதுதான் நமது சனநாயக உயர்வுக்கு அடையாளமாக இருக்க முடியும்.

காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?



இல்லவே இல்லை. முழுமையாகக் காஷ்மீர மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
நவ.5, 1951: அரசியல் நிர்ணய அவைகூட்டப்பட்டது.
நவ. 15, 1952:  அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆக.9,1953: காஷ்மீர இணைப்பைச் சட்டப் பேரவையைக் கூட்டி நிறைவேற்றாமல் பிரிவினை முயற்சியில் இறங்கினார் எனக் குற்றம்சாட்டப்பட்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 22 ஆண்டுக்காலம் அவர் சிறையிடப்பட்டார்.
பிப்ரவரி 1954: பலரும்கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 27, 1957: கணிப்புத் தேர்தல் நடத்த முடியாது என நேரு அறிவித்தார்.

 இருந்தாலும் 370ஆவது பிரிவு இன்னும் நீடிக்கிறதே?


பெயருக்குத்தான் நீடிக்கிறது. அந்தப் பிரிவின் கீழான அத்தனை உரிமையும் இன்று பறிக்கப்பட்டுள்ளன அல்லது குறுக்கப்பட்டுள்ளன. 1954ல் தொடங்கி இது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தனது கூட்டாட்சி அதிகாரத்தை மைய அரசு காஷ்மீர் மீது பரப்பத் தொடங்கியது. 1965ல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு காஷ்மீர் முதல்வராவதற்கு ஒருவர் 25 ஆண்டுக் காலம் காஷ்மீரில் வசித்திருக்கவேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்பட்டது. 1984ல் 248வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி காஷ்மீர் தொடர்பான போராட்ட எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையை இந்தியப் பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது. ‘ஜம்மு-காஷ்மீர் கலவரப் பகுதிச் சட்டம்’ (ஜூலை 1990), 1991ம் ஆண்டுப் ‘போராட்டத் தூண்டல் சட்டத் திருத்தம்’ ஆகியவற்றின் மூலம் கொடும் அடக்குமுறைக்கான உரிமைகளைக் காஷ்மீர மக்கள் மீது இந்திய அரசு எடுத்துக் கொண்டது. ‘பயங்கரவாதிகளை’ அடக்குதல் என்கிற பெயரில் காஷ்மீர மக்கள் ஊரடங்கு வாழ்வுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீர முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால் இந்தியர் யாரும் காஷ்மீருக்குள் நிலம் வாங்க முடியாதது என்ன நியாயம் என ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் வாதிடுகிறார்களே?



இது காஷ்மீர முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும், இந்துக்களுக்கும் பொருந்தும் சட்டம்தான். இந்தச் சட்டத்தை உருவாக்கியது இந்து டோக்ரா மன்னர்கள்தான். தமிழ்ச் சூழலைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இதனை யோசித்துப பாருங்கள். தமிழக மக்களைச் சுரண்டிச் சேகரித்த நிதியைக் கொண்டு வடநாட்டுப் பார்சி-பனியா சேட்டுகள் தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். இது எப்படி நியாயமாக இருக்க முடியும்? எனவே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்கலாம் என்கிற உரிமை வெளிநாட்டு, வடநாட்டு இந்து ஆதிக்கச் சக்திகளுக்குச் சாதகமான கோரிக்கைதான். மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மக்கள் மட்டுமே சொத்துக்கள் வாங்க முடியும் என்கிற நிலையைப் பரவலாக்குவதுதான் சரியான கோரிக்கையாக இருக்க முடியும்.

                      மார்க்க அடிபடையில் 


யாராவது ஒன்றுவிட்ட சகோதர உறவுமுறை உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்வார்களா? முஸ்லிம்கள் செய்து கொள்கிறார்களே?


நெருங்கிய இரத்த உறவுடையோர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்பது அறிவியல் முடிவு. இதன் பொருள் ஒன்றுவிட்ட சகோதரர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல. அக்காபிள்ளைகள், மாமன் பிள்ளைகள், அத்தைப் பிள்ளைகள் ஆகியோரைக் கூடத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதுதான். இந்துக்கள் இந்தத் திருமணத் தடைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். முஸ்லிம்கள் பெற்றோருடன் கூடப் பிறந்தவர்களின் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அவ்வளவுதான் வேறுபாடு. எனவே முஸ்லிம்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. முஸ்லிம்களும் கூட வேறு சில திருமணத் தடைகளைக் கடைபிடிக்கவே செய்கின்றனர். சீனாவில் இரண்டுவிதமான திருமண உறவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

 குறிப்பு :(சொந்தத்தில் அதிகாமான இஸ்லாமியர்கள் கல்யாணம் செய்துள்ளனர்  பெரிதாக யாரும் பாதிக்கபட்டதாகக் தெரியவில்லை ) 

இஸ்லாமியர் பசுவதை செய்பவர்களல்லவா? மாட்டிறைச்சி தின்பது இழிவல்லவா?



ஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறானது என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. சொல்லப் போனால் ஆடடிறைச்சியைக் காட்டிலும் மாட்டிறைச்சியில் புரோட்டீன் முதலிய சத்துக்கள் அதிகம். பசு மாமிசத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்து மதத்திலேயே பல பிரிவினர், ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டவர் எனப் பலரும் சாப்பிடுகின்றனர். வெளிநாட்டவர் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது மாட்டிறைச்சியைத்தான். வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் முழுவதிலும் ‘பீஃப் பிரியாணி கிடைக்கும்’ என்கிற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்க முடியும். 

வரலாற்றில் மேய்ச்சல் மற்றும் வேட்டை வாழ்க்கையை மேற்கொள்ளும் சமூகங்கள் கால்நடை இறைச்சி உண்பது வழக்கம். வேதகாலத்தில் குதிரை, மாடு முதலியவற்றைப் பலியிட்டுத் தின்றுள்ளனர். “உங்கள் பிள்ளைகள் அறிவுடையோராகவும், வேதமறிந்தவர்களாகவும், நீண்ட ஆயுளைப் பெற்றவராகவும் இருக்க வேண்டுமானால் நெய் சேர்த்த மாட்டுக் கறி சாப்பிடுங்கள்” என்று பிருகதாரண்ய உபநிடதம் (6418) குறிப்பிடுகிறது. இதற்கு ஆதி சங்கராச்சாரி உரையும் எழுதியுள்ளார். விவசாயச் சமூகங்களில் கால்நடைகளின் தேவை இருந்ததால் மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவானது என்கிற மதிப்பீடுகள் தோன்றின. இந்தியாவில் வேத மதத்திற்கு எதிராகத் தோன்றிய புத்த-சமண சமயங்கள் இதனை வலியுறுத்தின. எனவே பின்னாளைய பார்ப்பன மதமும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இழிவாக்கியது. இன்று விவசாயத் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு குறைந்துவிட்டது. எனவே உலகெங்கிலும் பல முன்னேறிய சமூகங்களில் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது.

நாம் செய்வது எல்லாவற்றிற்கும் எதிராகச் செய்கிறார்களே இஸ்லாமியர். நாம் இறந்தவர்களை எரித்தால் அவர்கள் புதைக்கிறார்களே? 


ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள் உள்ளன. முஸ்லிம்கள் மட்டுமல்ல; அய்ரோப்பியர், அமெரிக்கர், ரசியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து ‘அதிஷ்டானம்’ கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 பலதார மணம் புரிந்து கொள்வது குரானிலேலே அனுமதிக்கப்பட்டுள்ளதே?



எந்தச் சூழலில் பலதார மணம் குர் ஆனில் அனுமதிக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். இஸ்லாம் தோன்றிய காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், மதப் பிரிவுகள் ஆகியவற்றின் எதிர்ப்புக் குள்ளானது. நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கிருந்தது. போர்களில் ஆண்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டதையடுத்துச் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியது. எடுத்துக்காட்டாக உகுத் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் எழுபது ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்போது மொத்த சனத்தொகையே 700 பேர்கள்தான். இந்தச் சூழலில் சமூகச் சமநிலையைக் காப்பாற்றவும் விதவைகளுக்கு வாழ்க்கை தரவும் பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது. 


அனாதைப் பெண்கள், விதவைகள் ஆகியோரைப் பற்றிப் பேசும்போதுதான் புனித குர் ஆன் (4:3) ஒரு ஆண் நான்கு மனைவியரை திருமணம் செய்து கொள்ளலாம் எனச் சொல்கிறது. அந்த நால்வரும் சமமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. 

குர்-ஆன் இப்படி அனுமதித்துள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனப் பொருளில்லை. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களைக் காட்டிலும் இந்துக்கள்தான் அதிக அளவில் பலதார மணம் புரிபவர்களாக உள்ளனர் என்பது விளங்கும். இந்தியப் பெண்களின் நிலை பற்றி ஆராய அரசால் நியமிக்கப்பட்ட (1975) குழு ஒன்றின் முடிவு கீழே தரப்பட்டுள்ளது.பலதார மணம்
(எண்ணிக்கைகள் சதவீதங்களைக் குறிக்கின்றன)
ஆண்டுகள்                                          இந்துக்கள்                இஸ்லாமியர்
1931-41                                                      6.79                                        7.29
1941-51                                                    7.15                                         7.06
1951-61                                                     5.06                                        4.31

1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் கூடப் பலதார மணம் இந்துக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதை நிறுவியுள்ளது. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை 25 லட்சம் குறைவு. எனவே முஸ்லிம்கள் அனைவரும் நான்கு மனைவியரைக் கட்டிக் கொள்வது என்பதெல் லாம் நடைமுறைச் சாத்தியமில்லாத விசயங்கள்.

 

 இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களே?



இந்து மத வெறியர்கள் இந்தக் கருத்துக்கு ஆதரவாக 1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காட்டுவார்கள். அதாவது முஸ்லிம்களின் எண்ணிக்கை 61 மில்லியனிலிருந்து 75 மில்லியனாகியிருக்கிறது (30.69 சத அதிகரிப்பு). ஆனால் அதே சமயத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 453 மில்லியனிலிருந்து 549 மில்லியனாக உயர்ந்துள்ளது. (24.14 சத அதிகரிப்பு). இந்தப் புள்ளி விவரத்தை மட்டும் பார்க்கும்போது அவர்கள் சொல்வது உண்மை போலத் தோன்றும். முழுமையாக இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள கீழேயுள்ள தகவலைப் பாருங்கள். 

மக்கள் தொகை வளர்ச்சி(எண்கள் சதவீதங்களைக் குறிக்கின்றன.)
ஆண்டுகள்                   இந்துக்கள்            இஸ்லாமியர்
1961-71                                 23.69                        30.84
1971-81                                 24.14                        30.69
இதன்படி பார்த்தால் முதல் பத்தாண்டுகளைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதமோ குறைந்துள்ளது.ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. மக்கள் தொகை வளர்ச்சி வீதம் என்பது மத உணர்வைப் பொறுத்ததல்ல. கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சி போன்ற இதர காரணிகளையே அது பொருத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர் நிறுவியுள்ளனர்.

முஸ்லிம்கள் மத்தியில் கல்வி, பொருளாதார நிலைகள் என்பன இந்துக்களைக் காட்டிலும் குறைவு. முஸ்லிம்கள் மத்தியில் வறுமை இந்துக்களைக் காட்டிலும் 17 சதம் கூடுதல். பொதுவில் கல்வி வளர்ச்சி அதிகமாகும்போது குழந்தை பெறும் வீதம் குறைந்துவிடுகிறது. காஷ்மீரில் 75 சத முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்த சனந்தொகையில் முஸ்லிம்களின் வீதம் 5.21. மொத்தம் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களில் முஸ்லிம்களின் பங்கும் கிட்டத்தட்ட இதே அளவுதான் இருக்கிறது. எனவே முஸ்லிம் சனத் தொகை பெருகி வருகிறது என்பதும், இப்படியே போனால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவர் என்பதும்அப்பட்டமான பொய்கள்.

இஸ்லாமியர்க்கு மத உணர்வு அதிகமில்லையா? தேர்தல்களில் தங்கள் மத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தானே அவர்கள் வாக்களிக்கின்றனர்?



இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்களில்லை. இடத்திற்கு இடமும், காலத்திற்குக் காலமும் முஸ்லிம்கள் வாக்களிக்கும் முறையும் வேறுபடுகிறது. பால் ஆர்.பிராஸ் என்பவர் கான்பூரை மையமாமக வைத்தும் பீட்டர் பி. மேயர் என்பவர் திருச்சி, ஜபல்பூர் ஆகிய நகரங்களை மையமாக வைத்தும் 1957, 1962 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்  செய்த ஆய்வுகளின்படி முஸ்லிம்கள் மதவாத அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. (எகனாமிக் அண்ட பொலிடிகர் வீக்லி  ஆண்டுமலர், 1988). தேசியக் கட்சிகளுக்குத்தான் அவர்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்.

வகுப்புவாத இயக்கங்களாகத் தோற்றமளிப்பவைகட்கு அவர்கள் வாக்களிப்பதில்லை. 1952 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளில் 65.41 சதம் தேசியக் கட்சிகளுக்குத்தான் விழுந்தன. 1962ல் இது 75.2 சதமாக அதிகரித்தது. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12 சதம் பேர்  முஸ்லிம்கள் இருந்தும்கூட முஸ்லிம் லீக் கட்சியால் 1957 தேர்தலில் பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு உறுப்பினரையும், 1962ல் இரண்டே இரண்டு உறுப்பினர்களையும் மட்டுமே அனுப்ப முடிந்தது. இதுவும் கூடக் கேரளத்திலிருநதுதான் சாத்தியமாயிற்று. கூட்டணி இல்லாமல் எங்குமே முஸ்லிம் லீக்கோனில்லை வேறெந்த முஸ்லிம் கட்சிகளோ வெற்றி பெற இயலாது என்பதுதான் உண்மைநிலை.


அமெரிக்காவிற்கும் அரபுநாடுகளுக்கும் அல்லது இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடொன்றுக்கும் சண்டை வந்தால் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம்  நாடுதான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திகிறார்களே?



முஸ்லிம்கள் அப்படிப் பிரார்த்தித்தால்கூட அதில் எந்தத் தவறுமில்லை யாரும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முஸ்லிம் நாடுகளுக்கெதிராகச் செய்துவரும் அயாக்கியத்தனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாறு பூராவும் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளும், கிறிஸ்தவ மதமும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம். எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடுகள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கிய போதும் இன்றளவும் அமெரிக்க அய்ரோப்பியப் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்த எண்ணெய் வளத்தையும் கொள்ளையடிக்கின்றன. ஷாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான், அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத்தளமாகவுமே மாற்றப்பட்டது.

 இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க அய்ரோப்பிய வல்லரசுகளுக்கெதிராகவும், கிறிஸ்தவக் கலாச்சார மேலாண்மைக்கு எதிராகவும் எழுகிற இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாம் பார்க்க வேண்டும். கோமேனியின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை ‘இஸ்லாமியப் புரட்சி’ என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதை அடிப்படைவாதம் எனச் சொன்னால்கூட அது அமெரிக்க மேலாண்மையையும், அடிவருடி ஷாவின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் இருக்கும் நிலையில் முனனோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தது. ஆனால் அத்வானி தலைமையில் இங்கே உருவாகும் இந்து மீட்புவாதம் என்பது மாற்றங்களுக்கு எதிரானது. நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது. வருணாசிரமத்தை நிலைநாட்ட முனைவது. இந்த வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், இந்து மீட்பு வாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

அப்படியானால் இஸ்லாமிய மதம்தான் உயர்ந்தது என்கிறீர்களா?



மதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானதுதான் என்கிற கருத்தை நம்புகிறவர்கள் நாங்கள். ஒரு சிறுபான்மை மத்திதிற்கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டு அளவிலோ, உலக அளவிலோ பொய்ப் பிரச்சாரத்தை வலிமையாக மேற்கொள்ளும்போது நாம் உண்மையைக் கண்டறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். தவிரவும் எந்த ஒரு போராட்டமும், அது மத அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் பின்னணியாயுள்ள உண்மைகளை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதாயிருக்கிறது. இந்தியாவுக்குள் சாதியை வென்ற மதமாகவும் ஒப்பீட்டளவில் சமத்துவத்தைப் பேணும் மதமாகவும் இஸ்லாம் மட்டுமே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.


 நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத்தான் தோன்றுகிறது. என்றாலும்…. முஸ்லிம்கள் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்படையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே? அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா?

சிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமத வெறியும், வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன. அரசு, இராணுவம், பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும்  தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கிலானதல்ல.

 நாட்டுப் பற்றில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கை ஏற்கனவே குறிப்பிட்டோம். இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையே போர் மூண்டபோது முஸ்லிம்களின் தனிப் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்கள் இந்திய எல்லையைக் காப்பதற்காகத் தன் மகனை அனுப்பத் தயார் என்று கூறினார்.
நாட்டுப் பற்று என்பதெல்லாம் இயற்கையான உணர்வல்ல. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோது ஒரு ஜார்ஜியன் அல்லது உக்ரேனியனது நாட்டுப் பற்று என்பது சோவியத் யூனியனுக்கு விசுவாசமாக இருப்பது. இன்று அங்கே நிலைமை முறறிலும் மாறிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்று ஒரு ஜார்ஜியன் மாஸ்கோவுக்கு விசுவாசமாக இருந்தால் அதன் பெயர் நாட்டுப் பற்று அல்ல, தேசத் துரோகம்.

 

இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே? ஒரு கையில் குர் ஆனையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ‘ஜிஹாத்’ (புனிதப் போர்) நடத்துவதும்தானே இஸ்லாமியரின் மதக் கொள்கை?



இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதமுமல்ல. குர்ஆனின் அடிப்படைச் செய்தி வன்முறையுமல்ல. ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் பொருளே “ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக கொண்டு அமைதியை நிலைநாட்டுவது” என்பதுதான். ஒரு முஸ்லிம்கள் மற்றொரு மனிதனை அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி எதிரே பார்க்கும்போது ‘அஸ்ஸலாமு அழைக்கும் ’ என்று வாழ்த்த வேண்டும். இதன் பொருள் “உனக்கு அமைதி உண்டாகுக” என்பதுதான். அல்லாஹ் கருணையானவர். (அல் ரஹ்மான்); ஆறுதல் அளிப்பவர் (அல் ரஹீம்), கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை.

மதத்தைப் பரப்புவதில் வன்முறைக்கு மட்டுமல்ல. வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்கிறது குர்ஆன் (2:256).  இந்த வரிகளுக்கு விளக்கம் சொல்ல வந்த மவுலானா முகம்மதலி, “கத்தியை வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புமாறு நபிகள் நாயகம் சொன்னதாக அவதூறு செய்பவர்களுக்கு இதுவே பதில். அதிகாரம் கையிலுள்ள போது ‘மதத்தில் கட்டாயமில்லை’ என்கிற கொள்கையை முஸ்லிம்கள் கடைபிடிப்பது முககியம்” என்கிறார். அல்லாவைத் தவிரவேறு கடவுளை வணங்குவோரை அவதூறு செய்யக் கூடாது என்று சொல்லும் திருக்குர்ஆன் (6:109)  மற்ற கடவுளை வணங்குவோருடன் ஒரே சமூகமாய் இணைந்து வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. ‘இல்லாவிட்டால் அல்லாஹ் உங்களை மட்டும் தனியாக அல்லவா படைத்திருப்பார்”  என்பது இஸ்லாமிய இறைவாக்கு (5:48).
இதன் பொருள் இஸ்லாமில் வன்முறையின் அடையாளமே இல்லை என்பதல்ல; எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் போர்க்களத்தில் வன்முறையைப் பிரயோகிப்பதை ஆதரிக்கிறது. போர்க்களத்தில் இரத்த உறவுடையோர் மீது கூட வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்க வேண்டியதில்லை என்று கீதா உபதேசம் செய்யவில்லையா கிருஷ்ணன்? ‘ஜிஹாத்’ என்கிற புனிதப் போரும் இப்படி ஒரு சூழலை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதான்.

‘ஜிஹாத்’ என்பது மதத்தைப் பரப்புவதற்கான போர் அல்ல. அது ஒடுக்குமுறைக்கு எதிரான போர். ‘மக்கா’வில் இருந்தவரையிலும் ‘மதினா’வில் அடைக்கலம் புகுந்த கொஞ்சநாள் வரையிலும்கூட முகம்மது நபி அவர்கள் வன்முறை பற்றியும் ‘ஜிஹாத்’ பற்றியும் பேசவில்லை. நபிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்ததை மீறி அரேபியாவிலிருந்தே இஸ்லாத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிற கங்கணத்துடன் மாற்று நம்பிக்கையாளர்கள் போர் தொடங்கியபோதுதான் அவர் வன்முறை பற்றிப்பேசத் தொடங்கினார். போரைக்கூட, ‘அல்லாஹ்வின் வழியிலான போர்’ எனவும்,  ‘பிசாசின் வழியிலான போர்’ எனவும் பிரித்துப் பேசுகிறது குர்ஆன் (4:75). மவுலானா முகம்மதலி கூறுகிறார்: “மக்காவிலிருந்து ஒடுக்கு முறையார்களின் கொடுமை தாளாமல் முடிந்தவர்களெல்லாம் தப்பியோடிய பின்னர் பலவீனமானவர்கள் மட்டும் அங்கேயே தங்க நேரிட்டது. அத்தகைய பலவீனர்களும், பெண்களும், குழந்தைகளும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்ற போரில் இறங்கச் சொன்னார் நபிகள் நாயகம். ஒடுக்குமுறையாளரிடமிருந்து ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான போர்தான் அல்லாஹ்வின் வழியிலான போ.ர் ஒடுக்குவதற்கும் ஆக்ரமிப்பதற்குமான போர் பிசாசின் வழியிலான போர் (தாகுத்)”. ஆக்கிரமிப்புப் போரை குர்ஆன் மறுக்கிறது (2:190).


எந்த வழிபாட்டு இல்லத்தையும் இடிக்கக்கூடாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகிறது. ஏனெனில் “எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப்பெயர்தான்” (22:40). இஸ்லாமியரல்லாதவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாக குர்-ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் எந்த வரியுமே இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத காரணத்திற்காகத் தனிநபர்கள் தாக்கப்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல. ஒப்பந்தத்தை மீறி நியாயத்துக்குப் புறம்பாகத் தாங்கள் தாக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய வன்முறைதான் அது. அதிலும்கூட, “சிலை வணக்கம் செய்வோர் யாரேனும் பாதுகாப்புத் தேவை என உங்களிடம் வந்தால் அவருக்குப் பாதுகாப்பு அளியுங்கள். பாதுகாப்பான இடத்தில் அவரை சேர்ப்பிப்பது உங்கள் கடமை” என்கிறது குர்ஆன் (9:6).

அப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இஸ்லாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள்?



மறுபடியும் சொல்கிறேன். பொத்தம் பொதுவாக இந்துககள் என்று சொல்லாதீர்கள். சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதர்களாகத்தான் வாழ்கிறார்கள். வடமாநிலங்களில் பல இடங்களில் பெயர், உடை போன்ற அம்சங்களை வைத்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்துவிட முடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் உறவுமுறை சொல்லி வாழ்வது உங்களுக்குத் தெரியுந்தானே?

  சரி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?


தொடரும் இன்ஷா அல்லாஹ்.......!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza