Tuesday, October 23, 2012

கட்காரி நிறுவனத்தின் முறைகேடுகள் - டைம்ஸ் ஆப் இந்தியா அம்பலம்!


பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் நடவடிக்கைகளில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 

பூர்த்தி பவர் அன்ட் சுகர் லிமிடெட் என்ற நிறுவனம் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு ஐடியல் சாலை கட்டுமானக் குழும் (IRB) என்ற நிறுவனம் ஏராளமான கடன்களை வழங்கியுள்ளதுடன் முதலீடும் செய்துள்ளது. நிதின் கட்காரி 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ஐஆர்பி நிறுவனத்திற்கு மாநில அரசின் பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

ஐஆர்பி நிறுவனம் தவிர பூர்த்தி நிறுவனத்தில் மேலும் 16 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 16 நிறுவனங்கள் பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் 16 நிறுவனங்களும் கட்காரியின் நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமானவை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாட்டின் பல இடங்களில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது.

2010 - 2011ஆம் ஆண்டின் ஆவனவங்கள் படி பூர்த்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் இயக்குநர்கள் பட்டியலில் கட்காரியின் டிரைவர் , அவரது கணக்காளர் மற்றும் பூர்த்தி நிறுவன ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஐஆர்பி நிறுவனத்தின் துணை நிறுவனமான க்ளோபல் சேஃப்டி விஷன் என்ற நிறுவனம் பூர்த்தி நிறுவனத்திற்க 164  கோடி ரூபாய்களைக் கடனாக வழங்கியுள்ளது. பூர்த்தி நிறுவனத்தின் மொத்த வணிகம் 145 கோடியாகவும் அதன் இழப்பு 48.94 கோடியாகவும் இருந்தபோது இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதின்கட்காரியிடம் டைம்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டு கருத்து கேட்டபோது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் கூறியுள்ளார். கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் தாம் பூர்த்தி நிறவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பூர்த்தி நிறுவனத்தில் சந்தேகத்திற்கிடமான முதலீடுகள் எதுவும் இல்லை என்றும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் அவை 12 முதல் 15 ஆண்டுகள் வணிகத்தில் ஈடுபட்டு வருபவை என்றும் தற்போதைய பூர்த்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவே கூறியுள்ளார்.

ஆனால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தங்கள் பதிவு அலுவலகங்களாக நிறுவனப் பதிவரிடம் அளித்துள்ள முகவரிகள் போலியானவை என தங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக டைம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

பூர்த்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிவிதா டிரேடர்ஸ், ஸ்விஃப்ட்ஸோல், ரிக்மா ஃபின்டிரட், அஷ்வாமி சேல்ஸ் மற்றும் ஏர்ன்வெல் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பதிவு அலுவலக முகவரிகளாக டுபே சாவ்ல் பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. அது மும்பை அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ளது. அந்த காலனியின் உரிமையாளர் ரமேஷ் டுபேயிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்த காலனியில் இதற்கு முன்னரோ அல்லது தற்போதோ எவரும் அலுவலகம் வைத்திருக்கவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார்.

பூர்த்தி நிறுவனத்தின் மிக முக்கிய மூன்று முலீட்டு நிறுவனங்களான வித்யா பில்ட்கான், சனோபர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரோலர் மல்டி டிரேட் ஆகியவற்றின் பதிவு அலுவலக முகவரியாக மும்பை கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீநிவாஸ் இல்லம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புகழ்பெற்ற சோமானி குழுமத்திற்கச் சொந்தமானதாகும்.  மேற்கண்ட நிறுவனங்கள் எதுவும் இந்த முகவரியில் இல்லை என்று சோமானி குடும்பத்தினர் மறுத்துள்ளதாகவும் டைம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

பூர்த்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் முகவரிகளைப் போன்றே அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் டைம்ஸ் நிறுவனம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கட்காரியின் கார் டிரைவரான மனோகர் பன்சே என்பவர் பூர்த்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது. பன்சே முன்னர் மேலும் ஆறு நிறுவனங்களின் இயக்குநராகவும் இருந்துள்ளார். இதுதொடர்பாக திவேயிடம் கேட்டபோது, பன்சே கட்காரியின் டிரைவர்தான் என்பதை ஒப்புக் கொண்ட அவர், தற்போது அவர் ஒரே ஒரு நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே உள்ளார் என்று பதில் அளித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு கட்காரியின் இல்ல வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 7 வயதுடைய சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பன்சே முக்கியமான சாட்சி என்பது குறிப்பிடத் தக்கது.

2005ஆம் ஆண்டு முதல் பூர்த்தி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்து வரும் திவே, கட்காரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர் ஆவார். பின்னர் 1999 - 2004ஆம் ஆண்டு கட்காரி மகாராஷ்டிர மாநில எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதும் திவே கட்காரியின் செயலாளராகத் தொடர்ந்துள்ளார் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza