Saturday, October 27, 2012

பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி


தியாகத் திருநாள் சிந்தனை தேச முன்னேற்றத்திற்கு களம் அமைக்கட்டும் ! பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

மனித சஞ்சாரமற்ற மலைக்குன்றின் அடிவாரப் பாலைவனத்தில் இறைவனின் கட்டளைக்கு இணங்க தன் குடும்பத்தை தனித்து விட்டுச் சென்று புனித மக்காவில் மனித வாழ்க்கையின் விதையைத் தூவியவர். பகுத்தறிவிற்கு ஒவ்வாத நம்பிக்கைகள் மூலம் மக்களை அடிமைப்படுத்திய இராஜ்ஜியங்களுக்கு எதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவித்தவர். அவர் தாம் தியாகத்தின் திருவுருமாம் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் .


நீண்ட கால ஏக்கத்திற்கு பின் தான் பெற்றெடுத்த அருமை மகனாம் இஸ்மாயீல்(அலை) அவர்களை தனது வயோதிகப் பருவத்திலும் இறைவனின் கட்டளையை ஏற்று தியாகம் செய்ய முன்வந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை இந்நாளில் நினைவு கூறும் பொருட்டே " ஈதுல் அழ்ஹா " என்ற தியாகத் திருநாள் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களால் பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

தன்னுடைய வாழ்க்கையையே இயக்கமாக பரிணமித்து வாழ்வில் சந்தித்த சோதனைகளை , அதில் நேர்ந்த கடுமையான அனுபவங்களை தனது கொள்கைப் பாதையில் கஷ்டமாகவோ, தடையாகவோ, பாரமாகவோ கருதாமல் இன்முகத்துடன் அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதுதான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு இவ்வுலக மக்களுக்கு சொல்லும் செய்தியாகும்.

நமது நாடு சர்வதேச அளவில் முன்னேறி வரும் இந்தத் தருணத்தில் அதற்கு தடையாக நிற்கும் பாசிசம் , தீவிரவாதம், ஏகாதிபத்தியம், இலஞ்சம், ஊழல், பாரபட்சம், ஒடுக்கப்பட்ட மக்களை வேட்டையாடும் போக்கு இவைகளுக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்களை தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்துச் செல்வோம் .

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாகிய நாம் ஒன்றிணைவோம் ; உறுதியோடு முன்னேறுவோம் !

அனைவருக்கும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நெஞ்சம் நிறைந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza