Sunday, October 21, 2012

முதுமையை விரட்டுவோம் - இளமையாய் இருப்போம்


இளமை.. மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? பள்ளியில் படிக்கும் சிறுவனோ, கல்லூரி மாணவனைப் போல் வயது முதிர்ந்து தெரிகிறான். 30, 40 வயதை தொட்ட ஆணோ, பெண்ணோ நம் கண்ணுக்கு 50, 60 வயதுக்காரர்கள் போல் முதுமை தோற்றம் அளிக்கிறார்கள். 

முதுமையை மறைக்க முகத்தில் பவுடர்கள் வகை வகையான மேக்கப்கள் இளநரையை மறைக்க தலையில் டை . இளம்பெண்கள் முகமெல்லாம் பருக்கள், உடல் பருமன் தொப்பையுடன் நடக்க முடியாமல் திணறுவர். `சிறுவர்களுக்கு கூட மன அழுத்தம் ரத்த அழுத்தம். 30 வயதிலே  சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய். தங்களை சரிப்படுத்திக் கொள்ள மருத்துவர்களையும், அழகு நிலையங்களையும் நாடுவதை பார்த்து இருக்கிறோம். 

அவர்கள் ஏன் இப்படி இளமையிலேயே முதுமை தோற்றத்துடனும், நோய் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இந்த பிரச்சினைகள் எதனால் வருகிறது என்பதற்கு விளக்கம் தருவதுடன் அதற்கு தீர்வும் தருகிறார் வயது நிர்வாக சிறப்பு மருத்துவர் டாக்டர் கவுசல்யாநாதன். 

மருத்துவம் படித்த இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து நியூட்ரிசன் துறையில் ஆண்டி ஏஜிங் (முதுமை தடுப்பு) பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இளமைக்கு டிப்ஸ் சொல்லிக் கொடுத்தே இவரும் இளமையாக இருக்கிறார். இளமை ரகசியம் அதற்கான உணவு பழக்கங்கள் பற்றி இங்கே நமது வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறார். 

40 வயதை தொட்டு விட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டிப்பார்க்க தொடங்கி விடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சினைகளின் தொடக்கம் இந்த 40 வயதில்தான். இவ்வாறு 40 வயதில் பிரச்சினைகளை சந்திப்பதோ, அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்கள், எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும். 

இளமையில் முதுமை தோற்றம், உடல் பருமன் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் இவற்றுக்கெல்லாம் மூல காரணம் மாறிப்போன உணவு பழக்கங்கள். இரண்டாவது இந்த அவசர கால யுகத்தில் ஏற்படும் டென்சன், மன அழுத்தம், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். மூன்றாவதாக தூக்கமின்மை. அடுத்தது மது, புகை பிடித்தல், புகையிலை போன்ற கெட்ட பழக்க வழக்கங்கள். 

இவற்றில் இருந்து விடுபட்டு நம்மை நாமே சீரான உணவு பழக்கங்களுடன் மனதை பக்குவப்படுத்தும் சில பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உணவு பழக்கத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற உணவு பழக்கங்கள் உண்டு. நாம் எடுத்துக் கொள்ளும் தவறான உணவு வகைதான் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் பருமன், மன அழுத்தம் போன்றவற்றுக்கு வித்திடுகிறது. முதலில் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். 

கொழு கொழுவென்று இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியமானது என்று நினைக்க கூடாது, அது போல் உடல் பருமனாக இருப்பவர்கள் எல்லாம் ஆரோக்கியமானவர்கள், நன்றாக சாப்பிடுபவர்கள் அல்ல. இவையெல்லாம் ஹார்மோன் சுரப்பி கோளாறுதான். குழந்தை பருவத்தில் அந்த குழந்தையின் நடவடிக்கைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும். 

பள்ளி குழந்தைகளுக்கு வருடா வருடம் மாற்றும் சீருடையின் அளவு இடையில் குறைந்து குழந்தை திடீரென்று உடல் பருமனாவது தெரிய வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். ஹார்மோன் கோளாறு இருக்கிறதா? என்பதை பார்த்து அதற்கு ஏற்ற உணவு வகைகளை கொடுக்க வேண்டும். 

டீன்ஏஜ் பெண்கள் முகத்தில் பருக்கள், முடி உதிருதல், இளநரை இவையெல்லாம்  தவறான உணவு முறையால் வருபவை. நாம் சாப்பிடும் உணவில் சரிவிகித சத்துக்கள் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி சாதம் மற்றும் புரத சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது வழக்கமானது என்றாலும் போதுமான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புரோட்டின், வைட்டமின்களும், தாதுக்களும் உடலினை விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது. அடுத்து உணவு கட்டுப்பாடு அவசியம். ருசியாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சத்துக்கள் நிறைந்த உணவை அளவோடு சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

கட்டுப்பாடற்ற உணவு முறை, கெட்ட பழக்க வழக்கங்களால் இப்போது நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிக மோசமான நிலையை நோக்கி செல்வதாக ஐ.நா. சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025-ல் இது 4 மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. 

நம்மில் யாரும் வெளிப்புற அழகுக்கு காட்டும் அக்கறையை உள் உறுப்புகளை பாதுகாப்பதில் எடுத்துக் கொள்வது இல்லை. உள் உறுப்புகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு என்பது மிகமிக குறைவாக இருக்கிறது. உடல் சருமத்தை காக்க ஏகப்பட்ட விளம்பரங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படுகிறது. ஆனால் உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு இல்லை. 

30 வயதாக இருக்கும் ஒருவரது உள்உறுப்புகள் 40 வயதை தொட்டு விடுகிறது. இதயம், கல்லீரல், வயிறு, சிறுநீரகம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் 40 வயதை தொட்ட முதுமை அடைந்து விடுகிறது.  வயதுக்கு ஏற்ற உள்உறுப்பு வயது அமைவது இல்லை. காரணம் தவறான உணவு பழக்கம்தான். 14 வயது தொடங்கி 20 வயது வரை உள்ள கால கட்டம்தான் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. 

இந்த வயதில் நாம் என்ன பழக்கத்தை மேற்கொள்கிறோமோ அதுதான் பிற்காலத்தில் நம் வாழ்வை  நிர்ணயிக்க கூடியதாக இருக்கும். இரவு தூங்காமல் சினிமா பார்ப்பது கட்டுப்பாடு இல்லாமல் உணவு சாப்பிடுவது, கம்ப்யூட்டர் பேஸ்புக் முன் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பது என கெட்ட பழக்கங்களை இந்த பருவத்தில் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 

நகரங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தைகளை பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைத்துச் செல்கிறார்கள். நண்பர்கள் சேர்க்கை உருவாகிறது. வீட்டில் சாப்பிடாமல் ஓட்டல்களுக்கு போய் சாப்பிடுவது, புதுப்புது ஓட்டல்கள் திறக்கும் போது அங்கு போய் புதுசு புதுசாக சாப்பிடுவதை சிலர் வழக்கமாகி கொண்டு இருக்கிறார்கள். 

சைனிஸ், ஜப்பானிஸ், பீசா, பர்க்கர், இத்தாலியன் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இவற்றையொல்லாம் மாதம் ஒருமுறை சாப்பிடலாம். தினமும் சாப்பிடுவதால் உடல் பருமன் நோய் தாக்கி ஹார்மோன் சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். 25 வயதுக்கு மேல் அதன் பாதிப்பை உணருவோம். 

29 வயதில் இருந்து உடல் நிலை பற்றி கவலை ஆரம்பித்து விடுகிறது. 30 வயதுக்கு மேல் சருமம் தொய்வாகி முதுமை தலைகாட்ட தொடங்கி விடுகிறது. தொலைத்த வயதை ஈடுகட்டுவதற்காக அவர்கள் பார்க்காத டாக்டர் இல்லை. முடி கொட்டுதே என்று கண்ட கண்ட மருத்துகளையும், ஆயில்களையும் தேடுகிறார்கள். மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகிறார்கள். 

இதற்கு ஒரே தீர்வு சத்து நிறைந்த சரிவித உணவு வகைகள். 20 வயதில் சாப்பிட்ட அதே அளவு உணவை 40 வயதிலும் சாப்பிட கூடாது. 10 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும். 4 இட்லி சாப்பிடுவதை 3 இட்லியாக குறைக்கலாம். 4 கரண்டி சாதத்தை 3 கரண்டியாக குறைக்க வேண்டும். மாவு சத்து மற்றும் அரிசி சாதம் குறைத்து கீரை வகைகள், பயறு, காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

புரத சத்துக்களை பொருத்தவரை கொழுப்புடன் சேர்த்துதான் உணவு பொருட்கள் இருக்கும். கொழுப்பு அதிகம் இல்லாத பால், தயிர், தானிய வகைகள், சிறு தானியங்கள், சிக்கன், முட்டை போன்றவற்றை நம் உடல் வளர்ச்சிக்கும், வயதுக்கும் நாம் செய்யும் வேலைக்கும் தகுந்த மாதிரி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் ஆயிலே இல்லாமல் உணவு இருக்க முடியாது. 

தினமும் 4 ஸ்பூன் ஆயில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின்கள் கிடைக்கும். பாதாம், பிஸ்தா, பருப்பு வகைகள், நல்எண்ணை, சன்பிளவர் ஆயில் ஆகியவை உடலுக்கு நல்லது. எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும்.  ஆண்கள் சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தல், தவிர்க்க வேண்டும். 

சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சு உடலின் ரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் சென்று அடைவதில்லை. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக தூக்கம் இன்மை. இது நிறைய பேரை ஆட்டிப் படைக்கிறது. போதிய உடற்பயிற்சி, சிறிய தியானம், யோகா போன்றவற்றின் மூலம் தூக்கம் இன்மையை தவிர்க்கலாம். 

அலுவலகத்தில் வேலை பளு, குடும்ப பிரச்சினைகள், கணவன்-மனைவி இடையே ஒத்துப் போகாதது போன்றவை மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுகிறது. அதுவே நம் தூக்கத்துக்கு தடை போடுகிறது. தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை நம்மில் அதிகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6, 7 மணி நேரம் தூக்கம் அவசியம். 

இதை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியம், சருமம் பொலிவு ஏற்படும். இளமையுடன் இருக்கலாம். ஆழ்ந்த தூக்கம் வேண்டுமானால் மன அமைதி அவசியம். அதற்கு  தியானம், உடற்பயிற்சி, யோகா  கற்றுக் கொள்ள வேண்டும். அமைதியான வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும். 

காலையில் எழுந்ததும் சிறிய நடை பயிற்சி அவசியம். குறைந்தது 45 நிமிடம் முதல் படிப்படியாக 1 மணி நேரம் வரை நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் உடல்நிலை பாதிப்பு வந்த பின்பு மருத்துவர்களை சந்திக்க பல மணி நேரம் காத்திருப்பார்கள். 

முன்கூட்டியே நாம் எச்சரிக்கையுடன் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம். அதற்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். 18-ல் இருந்து 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜிம்முக்கு போய் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதுடன் இளமையும் அழகும் பெறலாம். ஆனால் உடற்பயிற்சி கூடங்களில் உடலை கூட்டவோ, குறைக்கவோ பவுடர் உணவுகளை சாப்பிடக்கூடாது. 

தப்பாக உடற்பயிற்சி செய்தால் நரம்பு பாதிப்பு ஏற்படும். பயிற்சியாளர் மூலம் ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்டு அவர் சொல்லும் உணவு பழக்கங்களை கடைப்பிடித்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். எனவே குழந்தைப்பருவத்தில் பெற்றோர் சத்தான உணவு கொடுத்து அவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். 

டீன் ஏஜ் பருவத்தில் சரியான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும். 20 வயதில் நல்ல ஒழுக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் நம் வாழ்க்கைக்கு தேவையான எளிய பயிற்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதுமையை விரட்டி என்றும் இளமையுடன் ஆரோக்கியமாக வாழலாம்.
-டாக்டர் கவுசல்யாநாதன். 
(maalaimalar.com)

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza