கைதிகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தை பேணிக் காப்பதற்காக, சிறைகளில், உடற் பயிற்சிக் கூடம் மற்றும் நூலகங்களை திறக்க, பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பீகார் மாநில, சிறைத் துறை ஐ.ஜி., ஆனந்த் கிஷோர் கூறியதாவது:பீகார் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில், தற்போது, 25 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இந்தக் கைதிகள், தங்களின் உடல் நலத்தை பேணி காக்க, உடற்பயிற்சி மேற்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவோ அல்லது விளையாடவோ, சிறைகளில் போதிய இடவசதி இல்லை.
அதனால், பீகாரில் உள்ள, எட்டு மத்திய சிறைகள் மற்றும், 31 மாவட்ட சிறைகளில், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலங்களை திறக்க, சிறைத் துறை முடிவு செய்துள்ளது. சிறைகளில், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைப்பது, நாட்டிலேயே முதல் முறையாக பீகாரில் தான் நடைபெற உள்ளது.உடற்பயிற்சிக் கூடங்கள் அமைப்பதற்காக, மத்திய சிறைகள் அனைத்திற்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்களில், இடம் பெறும் நவீன இயந்திரங்களில், எப்படி பயிற்சிகளை மேற்கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சியாளர் ஒருவரை, ஒவ்வொரு சிறையின் கண்காணிப்பாளரும் ஏற்பாடு செய்வார்.அத்துடன், சிறைகளில், நூலகங்களும் அமைக்கப்படும்; இந்த நூலகங்களில், மதம், அறிவியல் மற்றும் பொழுது போக்கு தொடர்பான புத்தகங்கள் இடம் பெறும். அடுத்த மாதத்திற்குள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகங்கள் அமைக்கும் பணிகளை முடிக்கும்படி, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு ஆனந்த் கிஷோர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment