உலகம் முழுவதும் உணவு பொருட்கள் விநியோகம் செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதற்கும் பூண்டு மட்டும் சுமார் 80 சதவீதம் சீனாதான் விநியோகம் செய்கிறது; இதிலிருந்து சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோக அளவை கணக்கீட்டுக்கொள்ளலாம்.
சீனா இவ்வாறு மலையளவு உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கு அங்கு அடிமாட்டு விலை ஊதியத்திற்குப் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள் ஒரு முக்கிய காரணம். என்னதான் இயந்திரங்கள் வந்தாலும், செர்ரி, பூ போன்றவற்றைக் கழுவி, கத்தரித்து, பேக் செய்ய முடியாது. ஆகவே மிக குறைந்த ஊதியத்திற்கு ஆட்களைப் பணியமர்த்தி உற்பத்தி செய்து வருகின்றனர் சீன விவசாய முதலாளிகள்.
பொருட்களை சீனாவிடம் வாங்கி தங்கள் நாட்டில் தங்களது நிறுவன பெயர் இட்டு ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்று கொழுத்து வந்தன ஐரோப்பா நாட்டு நிறுவனங்கள். ஆனால் இப்போழுது சீனா, தானே சொந்தமாக நிறுவனங்கள் தொடங்கி உலகம் முழுவதும் சில்லறை விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. உதாரணமாக உலக அளவில் அதிக தேன் உற்பத்தி செய்து வந்த சீனா, தற்போது உலகமயமாக்கலைச் சாதமாக்கிக்கொண்டு தாங்களே நேரடியாக உலகம் முழுவதும் பாட்டில்களில் தேன் விற்பனை செய்து வருகிறது. இதுபோல விறபனையால் தற்போது சீனாவில் பலமடங்கு உணவு தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது.
உணவு உற்பத்தியைப் பெருக்கும் சீனா, அதே வேளையில் ஆபத்தையும் பெருக்கி வருகிறது. உற்பத்தியில் அதிக மகசூல் பெற அதிக விஷ தன்மை உள்ளடங்கிய பூச்சிகொல்லிகள் உபயோக்கினறனர். தாவரங்களுக்கு அதிக விஷ தன்மை உள்ளடங்கிய பூச்சிகொல்லிகள் என்றால் கோழி, பன்றி போன்ற விலங்குகளுக்கு அதிக வீரியம் கொண்ட ஆண்டிபயோடிக் செலுத்துகிறார்கள். 2008ல் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான சீன குழந்தைகள் பால் பவுடர் மற்றும் குழந்தை உணவு பொருட்களில் கலந்திருந்த இரசாயன மெலமைன் உட்கொண்டதில் பாதிக்கப்பட்டனர்.
இராசாயன சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணிகள், கார்சினோஜெனிக் ஃபார்மால்டிஹைடு (carcinogenic formaldehyde) கலந்த முட்டைகோசு, உணவு விடுதிகளில் சமையலுக்குப் பயன்படுத்திய சாப்பாட்டு எண்ணெயை மீண்டும் சுத்தம் செய்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது போன்ற தில்லுமுல்லுகளும் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளது. சீன அரசாங்க நாளிதழான சைனா டைய்லியே போலி முட்டைகள் பற்றிய செய்தி வெளியிடும் அளவிற்கு சீன பொருட்களில் கலப்படமும், போலிகளும் அதிகமாகி விட்டது.
இதை விட ருசிகரமான தகவல் என்னவெனில், ஊ ஹெங் (Wu Heng) என்ற வழக்கறிஞர் ஒரு நாள் பன்றி இறைச்சியை இரசாயனம் கலந்து மாட்டுகறி என்று கூறி விற்பனை செய்து வந்ததைக் கண்டுபிடித்து சீனாவில் நடந்துவரும் உணவு சம்பந்தப்பட்ட குற்றங்களை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு வலைதளம் உருவாக்கினார். வலைதளத்தின் பெயர் Throw it Out the Window. முன்பு ஒரு முறை அமெரிக்காவின் ஜனாதிபதி Theodore Roosevelt, சிகாகோ பலிபீடங்கள் எவ்வாறு மிருகங்களைப் பலியிடுகிறது என்று தெரிந்து கொண்ட போது தனது காலை சிற்றுண்டியை வீசி எறிந்ததாக கூறினார். அதை கருத்தில் கொண்டே அதே பெயரில் வலைதளத்தை உருவாக்கியுள்ளார் ஊ ஹெங்.
சீனாவின் உற்பத்தி பொருட்களில், காய்கறிகளை விட இறைச்சி உணவுதான் அதிக கேள்விக்குரியதாக இருக்கிறது. முன்பு சீன பண்ணையாளர்கள் ஏற்றுமதிக்குத் தயாராகும் உணவையே தாங்களும் உட்கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் தற்போது விழிப்புணர்ச்சி அடைந்தவர்கள், தங்களுக்குத் தனியாகவும், ஏற்றுமதிக்குத் தனியாகவும் உற்பத்தி செய்கிறார்கள். தங்களுக்கென உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு உரம், பூச்சிகொல்லி இல்லாமலும், இறைச்சிகளில் ஹார்மோன் மற்றும் ஆண்டிபயோடிக் மருந்துகள் செலுத்தாமலும் பண்டைய விவசாய முறைப்படி உற்பத்தி செய்கிறார்கள். பல செல்வந்தர்களும், மூத்த அரசியல் தலைவர்களும் தனியாக நிலங்களை வாங்கி விவசாயம் செய்து கொள்வது அங்கு சகஜமாகி வருவதாக அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். இதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் பீஜிங் ரெனிம் பல்கலைகழக பேராசியர் ஒருவர் ஜெர்மனிய பத்திரிக்கைக்கு இதை தெரிவித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க சீன அரசே 2009 ல் உணவு பாதுக்காப்பு பற்றிய சட்டத்தையும், 2010 ல் இதற்கென தனி கமிஷனும் அமைத்தது. மேலும் இந்த நச்சு உணவுகளைத் தயாரிப்பவர்களைக் காட்டிகொடுத்தால் அவர்களுக்குச் சன்மானமும் வழங்குகிறது. இருந்தாலும் எண்ணற்ற சீன உணவு உற்பத்தி நிறுவனங்கள் அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
சீன உற்பத்தியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தான் அதிக உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. தற்போது நம் நாட்டிலும் சீன உணவு பொருட்களின் இறக்குமதி அதிகரித்து கொண்டுவருகிறது. மார்க்கெட்டில் விலை குறைவு என்ற காரணத்திற்காக சீன பூண்டையே நாம் வாங்கிறோம். மேலும் குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி போன்ற சாக்லேட்களும், நூடுல்ஸ், எம்.எஸ்.ஜி (அஜினமோட்டோ) போன்ற சீன உணவு பொருட்களும் அதிகரித்து வருகின்றன.
இன்றைய நிலையில், நாம் சீன உணவு பொருட்களை நேரடியாக வாங்காவிட்டாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் உணவு பொருட்களுக்குத் தேவையான உற்பத்தி பொருட்களை சீனாவிடமிருந்து வாங்கி, அதில் தயாரித்த உணவு பொருட்களை நம்மிடம் விற்று வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் வெளிவந்து ஓடி கொண்டுயிருக்கின்ற ஒரு தமிழ் திரைப்படத்தில் குழந்தைகள் வேகமாக வளர தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து பவுடரில் கலந்துள்ள விஷத்தன்மை, அந்த பவுடர் தயாரிக்க பயன்படும் மாட்டுப்பால் மூலம் கலக்கப்படும். முதலில் மாட்டு தீவனத்தில் அந்த விஷத்தன்மை கொண்ட பொருளைக் கலந்து மாடுகளுக்குக் கொடுத்து, பின்பு அந்த மாடு கறந்த பால் மூலம், குழந்தைகள் உயரமாக வளர பயன்படுத்தும் ஊட்டசத்து பானம் தயாரிக்க படுவதாக இயக்குனர் காட்டியிருப்பார. இதை வெறும் கற்பனையாக மட்டும் நாம் எடுத்து கொள்ள கூடாது. இது போல பல உணவு பொருட்களைத் தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் உற்பத்திக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மூலப்பொருட்களை சீனாவிடமிருந்து வாங்கி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களையே நாம் வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகிறது.
இதற்கு பதில் அளிக்கும் சீன உணவு உற்பத்தியாளர்கள், "நீங்கள் எதுபோல நாடுகிறீர்களோ அது போல உங்களுக்குக் கிடைக்கும், எந்தத் தரத்தில், எந்த விலையில் உங்களுக்குத் தேவையோ அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட பொருட்கள் உங்கள் தேவைக்கேற்ப கிடைக்கும்" என்கிறார்கள்.
சீனா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 35 விழுக்காடு உணவு பொருட்கள் தான் இருக்கிறது, அதில் 15 சதவீதம் இறைச்சி பொருட்களும், 20 சதவீதம் காய்கறி பொருட்களும் என்ற நிலையில் உள்ளது. இவற்றை இறக்குமதி செய்யும் நாடுகள் சரியான முறையில் சோதனை செய்து உள்ளே அனுமதிக்கின்றனவா என்பது சந்தேகம்தான். என்னதான் ஊழலற்ற அதிகாரிகள் இல்லாவிட்டாலும் மீன், கோழி, இறால் போன்றவை மிக குறுகிய காலத்திற்குள் சோதனை செய்து விற்பனைக்கு விநியோகம் செய்வது என்பது கடினமான காரியம்தான். கன்டைனர்களில் வரும் உணவு பொருட்கள் சரியான குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கிறதா, அதற்கு தகுந்த தட்ப வெப்பநிலை அமைக்கப்பட்டு இருக்கிறதா என்பதும் முக்கியமாகிறது. அதைவிட முக்கியமாக உள்ளூர் கடைகளில் அந்தப் பொருட்கள் விற்கப்படும் போது அவர்கள் அதற்கான குளிர்யூட்டும் சாதனம் அமைத்துள்ளார்களா என்பதும் ஐயமே. மேலும் பல சூப்பர் மார்க்கெட்டுகளில் மின்சார செலவைச் சமாளிக்க இரவில் குளிர்சாதன பெட்டிகளின் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றனர். (பகலில் இயங்குவதற்குக்கூட இங்கு மின்சாரம் இல்லை என்பது வேறு விசயம்). இதுவும் உணவு பாதுக்காப்பு சம்பந்தப்பட்ட விசயத்தில் முற்றிலும் தவறான செயல்பாடு ஆகும்.
மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களே சீனாவில் இருந்து வாங்கும் பொருட்கள் ஆபத்தானவை என்று நன்றாக புரிந்து வைத்துள்ளது. ஆனால் விநியோக தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது?. குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றால்தானே அதிக இலாபத்தைப் பெற முடியும். அதனால்தான், அவர்களின் பத்து ருபாய் குளிர்பான விளம்பரத்திற்கு வரும் நடிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களால் கோடிகளை அள்ளித் தர முடிகிறது.
வால்மார்ட், கேரிஃபோர் போன்ற நிறுவனங்கள் விரைவில் நம் நாட்டிலும் கடை விரிக்க போகிறார்கள், இதனால் சில்லறை விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் நம் வாய்களில் திணிக்கப்போவது வெளிதோற்றத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கும் சீன பொருட்களினால் உருவான நச்சு உணவுகள்தான் எனபதில் சந்தேகமில்லை. இவ்விசயத்தில் கவனமுடன் இருக்கவேண்டியது நுகர்வோர்களாகிய பொதுமக்கள்தான்!
source: inneram
0 கருத்துரைகள்:
Post a Comment