டெல்லி: நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவி ஏற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மாவுக்கும் இடையே, இந்த தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நாட்டின் 13-வது ஜனாதிபதியாக, பிரணாப் இன்று பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக இன்று காலை தனது இல்லத்திலிருந்து கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.