Wednesday, July 25, 2012

இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்பு – பாரபட்சமற்ற முறையில் பணியாற்றுவேன் என உறுதி!

Pranab Mukherjee sworn-in as 13th President
டெல்லி: நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவி ஏற்றார். அவருக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, கடந்த 19-ம்  தேதி புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்  பி.ஏ.சங்மாவுக்கும் இடையே, இந்த தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி  பெற்றார்.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் நேற்றுடன்  நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நாட்டின் 13-வது ஜனாதிபதியாக, பிரணாப் இன்று  பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக இன்று காலை தனது இல்லத்திலிருந்து  கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின்  முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தியின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி  ஆகியோரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து விழா தொடங்குவதற்கு முன்பாக, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும், புதிய  ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மாளிகையில்  இருந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக அழைத்து  வரப்பட்டனர்.
அவர்களை தலைமை நீதிபதி கபாடியா, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சபாநாயகர்  மீராகுமார் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு அழைத்துச்  சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  நடைபெற்ற விழாவில், காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ்.எச்.கபாடியா,பிரணாப் முகர்ஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதும், 21 துப்பாக்கி குண்டுகள்  முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியாக இன்று பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி  ஆற்றிய தனது முதல் உரையில், ‘அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் வகையில் பாரபட்சமற்ற  ஜனாதிபதியாக பணியாற்றுவேன்’ எனக்  கூறினார்.
வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாது உண்மையிலேயே தாம் அவ்வாறு செயல்படப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த தாம், நாட்டின் தலைமை  பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைவதாக கூறிய பிரணாப், ஏழைகளும்  இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர்,  மேலும் பேசுகையில்,”நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன்.  அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன். நாட்டிலிருந்து வறுமையை  முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை  முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன்.பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான  நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன்.
ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன்.  மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம்,  மதம் மற்றும் ‌மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன்.நாட்டின்  இறையாண்மையை காப்பேன்.எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும்  காட்டுவேன்’ என்றார்.
துணை ஜனாதிபதியும்,மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி,  நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய  முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய  அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza