கணவன்-மனைவி இவர்களுக்கான ரோல் என்ன?
கணவன்-மனைவி இருவருக்குமே குடும்பத்தில் ஒரு ரோல் அல்ல பல ரோல்கள் காத்திருக்கின்றன. இது என்ன சீரியலா? சினிமாவா? ரோலைப் பற்றி பேசுகிறோம்! என உங்கள் மனதில் கேள்வி எழலாம்! ஆனால் குடும்பத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பல ரோல்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற நடிப்பு அல்ல. உண்மையிலேயே நீங்கள் உங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகின்றீர்கள்!
பெற்றோருக்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக, உடன்பிறந்தவர்களுக்கு சகோதரனாக ஒருஆண் தனது பங்களிப்பை நிறைவேற்றவேண்டிய கடமை உள்ளது. அதைப் போலவே பெண்ணும் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என தனது ரோலை நிறைவேற்ற வேண்டும். ஆணும் சரி, பெண்ணும்சரி தங்களது ரோலை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றமுறையில் கச்சிதமாக நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரச்சனைகள் நிச்சயமாக உருவாகாது.
ஒரு தந்தை, தனது மகன் தான் கூறும் அறிவுரையை கேட்காத பட்சத்தில் ‘அடித்து விடுவேன்’ என மிரட்டுவார். ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் சிறுமகனை அடிக்க முடியுமா?இருந்தாலும் அடித்து விடுவேன் என மிரட்டுவது ஒரு நடிப்பு தானே! ஆனால் சிலர் கண்டிக்கும் விஷயத்தில் தங்களது குடும்பத்தினரிடம் வரம்பு மீறி நடந்துக் கொள்வர்!இவ்வாறான குடும்பத்தில் எங்கே அமைதி தவழும்?
கண்டிப்பதாக இருந்தால்கூட கண்ணியத்தோடு கண்டியுங்கள். ஏனெனில் கண்டிப்பதும் இல்லறத்தில் ஓர் அம்சம்தானே! தவறு என்பது அனைவருக்கும் ஏற்படும். தவறு செய்யாதவர் எவருமிலர். சில தவறுகளை உபதேசங்கள் மூலமாக தடுத்துவிடலாம். இன்னும் சில தவறுகளை கண்டித்தால் மட்டுமே தடுக்கமுடியும். ஆனால் ஏன் கண்டிக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவருக்கு புரியவைப்பதும் கடமை. இல்லையெனில் மனதில் குரோதம் வளர்ந்துவிடும்.
சிலர் வெளிப்படையாக கடுமையாக நடந்துக் கொள்வார்கள். ஆனால், உள்ளத்தில் அன்பை தேக்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு தேக்கி வைத்து என்ன பயன்? நீங்கள் உங்கள் மனைவி மீது அன்பையும், உங்கள் குழந்தைகள் மீது பாசத்தையும் வைத்துள்ளீர்கள் என்றால் அதனை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் உங்கள் அன்பை புரிந்துக் கொள்வார்கள்.
அன்பை எப்படி வெளிப்படுத்துவது?
திருமணமான புதிதில் கணவனுக்கு மனைவியின் தவறுகளெல்லாம் சரியாகவே படும். ஏற்கனவே இது பற்றி முன்னர் சிறிது விவாதித்திருக்கிறோம். சமையலில் உப்பை அள்ளிப் போட்டாலும் சரி, மிளகாய்த் தூளை அளவுக்கு மீறி கொட்டினாலும் கூட உணவு அமிர்தமாகவே இருக்கும். மனைவி தனது முகத்தில் முளைத்துள்ள முகப்பருக்களை குறித்து கவலையுடன் கணவனிடம் கூறுவாள். கணவனோ, உனது முகத்திற்கு அழகே இந்த முகப்பருதான் என புதுமண மயக்கத்தில் கூறுவான். ஆனால், சிறிதுகாலம் கழித்து அதாவது மயக்கநிலை தெளிந்த பின்னர் எல்லாமே எதிர்மறையாக தோன்றும். ஆனால் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லறம் என்பது நுகர்ந்துவிட்டு கசக்கி எறியும் ரோஜாப்பூ அல்ல. உடல் இச்சை மட்டுமே இல்லறம் என கருதுவோருக்கு வேண்டுமானால் இவ்வாறு இருக்கலாம். ஆனால், இல்லற வாழ்க்கையை இலட்சிய கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக குடும்பவாழ்வு என்பது அமைதி தவழும் பூந்தோட்டமாகும். அங்கே ஒவ்வொரு பூக்களும் வெவ்வேறு ரகம். மாறுபட்ட நறுமணங்கள். எதை நுகர்ந்தாலும் மீண்டும் அதனை நுகர தோன்றும். இல்லறத்தை இவ்வாறே கருதுவோம்.
அன்பு, அரவணைப்பு, பாராட்டு, பரிவு, விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் இவையெல்லாம் இல்லற வாழ்க்கையில் இன்றியமையா அம்சங்களாகும். இவையெல்லாம் அடங்கிய பாசப் பிணைப்புதான் குடும்பம் என்ற கயிற்றை வலுவாக்கும்.
தவறு செய்யும் போது கண்டிக்க தெரியும் நமக்கு, சரியாக செய்தால் ஏன் பாராட்டும் மனம் வருவதில்லை?
சமையலில் உப்போ மிளகோ அதிகமானால் எரிச்சல் அடைகிறோம். குறைந்த பட்சம் முகத்தில் மாற்றம் தெரியும். ஆனால், அதே மனைவி நன்றாக சமைத்தால் மெளனமாக உண்டுவிட்டு எழுந்து சென்றுவிடுவோம்!சற்று பாராட்டிவிட்டுத்தான் செல்லுங்களேன்! அடுத்த முறை சமையல் இன்னும் தூள்கிளப்பும்!
கணவன் ஆசையோடு ஏதேனும் பொருளை வாங்கிவந்தால் தனக்கு பிடிக்காததால் முகத்தை சுழிக்கும் மனைவி அதே கணவன் தனக்கு பிடித்தமான பொருளை வாங்கி வரும்போது அல்லது தன்னை கடைவீதிக்கு அழைத்துச் சென்று பிடித்த பொருளை வாங்கித் தரும்போது பாராட்டுவதற்கு உள்ளத்தில் உதிப்பு ஏற்படுகிறதா? பாராட்டுங்கள்! அது உங்களுக்கு சற்று பிடிக்காமல் இருந்தால் கூட!அடுத்த முறை உங்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சிய பொருளை கணவன் வாங்கித் தருவார்! (பி.கு.உங்கள் கணவரின் பொருளாதார வசதியையும் சற்றுகவனித்துக் கொள்ளுங்கள்).
உணவில் தலைமுடி, கைத்தவறி பொருட்கள் கீழே விழுந்து உடைதல், பொருட்களை உரியஇடத்தில் வைக்காமை இவையெல்லாம் எரிச்சலை ஏற்படுத்தினாலும் சற்று அடக்கிக் கொள்ளுங்கள். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். பொறுமையாக அறிவுரை கூறுங்கள். அறிவுரையுடன் நிறுத்தி விடாதீர்கள். நீங்களே தவறுகளை சரிசெய்யலாம். அல்லது தவறுகள் நேராமலிருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து உபதேசிக்கலாம்.
‘சரி பரவாயில்லை!எதிலும் சற்றுக் கவனமாகஇ ருக்கணும்’, ‘இதுவெல்லாம் எல்லோருக்கும் ஏற்படுவது சகஜம்தான்’. இவ்வாறான வார்த்தைகளை பிரயோகியுங்கள். இதற்கு மாற்றமாக நீங்கள் நடந்துகொண்டால் அதன் எதிர்விளைவுகள் சமையலிலிருந்து இன்னும் பல விஷயங்களிலும் பிரதிபலிக்கும். மீண்டும் குடும்பத்தில் சுமூக நிலை திரும்ப சிலநாட்கள் ஆகும். இது தேவையா?
மன்னிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டால் உங்கள் மீது துணைவியின் அன்பு அதிகரிக்கும். அதுமட்டுமல்ல எந்த காரியத்தை செய்தாலும் கவனமும், பொறுப்புணர்ச்சியும் அவருக்கு ஏற்படும். ஏனெனில் உங்களுக்கும் இதே தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே ‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்ற பழமொழியைப் போல் ஆகிவிடக் கூடாது.
உபதேசம் கூறும்பொழுதும் கவனம் தேவை. ரொம்ப ஓவரா உபதேசிக்காதீர்கள். ‘இந்த உபதேசத்தை விட என்னை திட்டியிருக்கலாம்’ என உங்கள் மனைவி கருதிவிடுவார்.
சரி திருமணம் எதற்காக?
இன்ஷாஅல்லாஹ் தொடரும்…
0 கருத்துரைகள்:
Post a Comment