Saturday, July 28, 2012

தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 18 முஸ்லிம்கள் விடுதலை!

Gujarat HC grants relief to 18 convicts
அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப்படுகொலைக்கு பழிவாங்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் போராளி இயக்கங்களுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 18 பேரை உயர்நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தகால அளவை தண்டனைக்குரிய காலமாக கணக்கிட்டு அவர்களை நீதிமன்றம் விடுதலைச் செய்தது.
சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு 10 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
2010 ஜனவரி மாதம் 12-ஆம் தேதி இவ்வழக்கில் 22 பேருக்கு  சிறப்பு பொடா நீதிமன்றம் தண்டனை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18 பேருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மூன்று பேருக்கு ஒன்பது ஆண்டுகள் தண்டனையும், ஒரு வழக்கறிஞருக்கு மூன்றரை ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

“நாங்கள்5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கால அளவை தண்டனை காலமாக நீதிமன்றம் பரிசீலித்தால், விடுவிக்க கோரி மேல்முறையீட்டு மனுவில் உறுதியாக இருக்க மாட்டோம்”  என 10 ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து டி.ஹெச்.வகேலா, ஜி.பி.ஷா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மாநில அரசின் பதிலை கேட்டது.
தண்டிக்கப்பட்டவர்களின் மனுவை நீதிமன்றம் பரிசீலித்தால் மாநில அரசு எதிர்க்காது என்று சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜே.எம்.பஞ்சால் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசு தனது முடிவை அறிவித்துவிட்ட நிலையில் இதர ஏதேனும் வழக்குகளில் அவர்களை காவலில் வைக்கவேண்டியது இல்லையெனில் விடுதலைச் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை ரூ.100 ஆக குறைத்து உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு அபராத தொகை குறைக்கப்பட்டது. இதனை ஒரு மாதத்திற்குள் கட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு இவ்வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. மொத்தம் 44 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 22 பேர் மீது ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தண்டிக்கப்பட்ட 22 பேரில் 21 பேர் அஹ்மதாபாத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மும்பையைச் சார்ந்தவர்.
குஜராத் இனப்படுகொலைக்கு பழிவாங்க இவர்கள் பாகிஸ்தான் சென்று ஆயுத பயிற்சியை பெற்றார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza