Tuesday, July 17, 2012

போலீஸ் கஸ்டடி மரணம்: காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை!

Khwaja Yunus
மும்பை:2002-ஆம் ஆண்ட் காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் கஸ்டடியில் கொலைச் செய்யப்பட்ட காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு மஹராஷ்ட்ரா அரசு இதுவரை இழப்பீட்டை வழங்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றம் 2012 ஏப்ரல் 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி 17 லட்சம் ரூபாய் காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
இதுத்தொடர்பாக மஹராஷ்ட்ரா அரசின் உள்துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக யூனுஸின் தாயார் ஆஸியா பேகத்தின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தெரிவித்துள்ளார்.
காஜா யூனுஸ் ஆசியா பேகத்தின் ஒரே மகன் ஆவார். இவர் துபாயில் சாஃப்ட்வெயர் எஞ்சீனியராக பணியாற்றி வந்தவர். விடுமுறையில் ஊருக்கு செல்லும் பொழுது அநியாயமாக காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் போலீஸ் காவலில் வைத்து கொலைச் செய்யப்பட்டார்
.
இதுத்தொடர்பான விசாரணையின் போது இழப்பீட்டுத் தொகையை 3 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக மும்பை உயர்நீதிமன்றம் உயர்த்தி உத்தரவிட்டது. எட்டு வாரங்களுக்குள் இழப்பீட்டை வழங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. நீதிமன்றம் உத்தரவிட்ட கால அவகாசம் ஜூன் மாதம் முடிவடைந்தது. ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் கஸ்டடியில் கொடூரமான சித்திரவதைகளின் இறுதியில் காஜா யூனுஸ் கொலைச் செய்யப்பட்டார். தொடர்ந்து போலீஸாரே, உடலை எங்கோ புதைத்துவிட்டனர். ஆனால், கஸ்டடியில் இருந்து தப்பிச் சென்ற யூனுஸை காணவில்லை என போலீஸ் அபாண்டமாக பொய் கூறியது. இதனைத் தொடர்ந்து ஆஸியா பேகம் நீதிமன்றத்தை அணுகினார்.
இறுதியில் காஜா யூனுஸ் கஸ்டடியில் வைத்து மரணித்ததாக 2008-ஆம் ஆண்டு மாநில அரசு ஒப்புக்கொண்டது. இழப்பீட்டு தொகையாக 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் அறிவித்தது. துவக்கத்தில் இழப்பீட்டுத் தொகையை வாங்க யூனுஸின் குடும்பத்தினர் மறுத்த போதிலும் பின்னர் பெற்றுக்கொண்டனர். பின்னர் மும்பை உயர்நீதிமன்றம் மேலும் 17 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகைதான் இதுவரை வழங்கப்படவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza