புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் துவக்கத்தில் கைதான அப்ரார் அஹ்மதிடம் இதர நபர்களை அடையாளம் காட்ட சொத்து வாங்கி தருவதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை ஆசை காட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் மறு விசாரணையை நடத்தி வரும் என்.ஐ.ஏ இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஏ.டி.எஸ் துவக்கத்தில் அப்ரார் அஹ்மதை அப்ரூவராக சித்தரித்து பின்னர் திருத்தியது. போலீஸ் கஸ்டடியில் இருந்த 3 தினங்களும் தன்னிடம் சில நபர்களின் ஃபோட்டோக்களை காண்பித்து அவர்களை அடையாளம் கண்டுகொண்டதாக ஒப்புக்கொள்ள ஏ.டி.எஸ் கூறியதாகவும், அவ்வாறு ஒப்புக்கொண்டால் கஷ்மீர் மாநிலம் தவிர வேறு எங்கேயும் தனது பெயரில் சொத்து வாங்கி தருவதாக ஏ.டி.எஸ் ஆசை காட்டியதாக அப்ரார் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இவ்வழக்கில் துவக்கத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான முஹம்மது அலி குண்டுவெடிப்பு நிகழ்ந்த தினத்தில் மும்பை ஏ.டி.எஸ்ஸின் குர்லா அலுவலகத்தில் இருந்தார் என்ற தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.
2006 ஜூலை மாதம் மும்பை ரெயில் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அன்று முஹம்மது அலி விசாரணைச் செய்யப்பட்டு வந்தார். அப்ரார் அஹ்மதுக்கும், குண்டு வைத்தவர்களில் ஒருவர் என ஏ.டி.எஸ் குற்றம் சாட்டிய ஸஈத் அப்துல் மஜீதுக்கும் இடையே நடந்ததாக ஏ.டி.எஸ் தாக்கல் செய்த தொலைபேசி உரையாடல் போலீஸிற்காக தயாரிக்கப்பட்டது என என்.ஐ.ஏ மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மஜீதிற்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதல்ல என்றும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த அன்றைய தினம் மஜீத், ஒரு மதரஸாவில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்றும் உள்துறை அமைச்சகத்தில் ஒரு அதிகாரியை மேற்கோள்காட்டி தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வழக்கில் முன்னர் குற்றம் சாட்டப்பட்ட ஷபீர் பாட்டரிவாலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றது என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.
குண்டுவெடிப்பிற்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட போலி வெடிக்குண்டில் காணப்பட்ட மண்ணும், ஷபீரின் கோடவுனில் உள்ள மண்ணும் ஒன்றே என ஏ.டி.எஸ் கூறியது. ஆனால், இதன்பெயரால் ஏ.டி.எஸ் முன்னிலைப்படுத்திய சாட்சிகள், தங்களை ஒருமுறை கூட போலீஸ் விசாரிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக தற்பொழுது கைதாகி சிறையிலிருக்கும் கர்னல் புரோகித்தும் வழக்கை திசை திருப்ப வேண்டுமென்ற முயற்சி மேற்கொண்டதாக என்.ஐ.ஏவுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
நாசிக்கில் மிலிட்டரி இண்டலிஜன்ஸ் அதிகாரியாக பணியாற்றிய புரோகித், விசாரணையை திசை திருப்ப, ‘சிமி’ உறுப்பினரான நூருல் ஹுதா தோஹாவுக்கு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக அறிக்கை அளித்திருந்தார். ஹுதாவுக்கு இதர நபர்களுடன் சேர்த்து கடந்த ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment