லண்டன்:இரண்டு வாரங்களுக்கு அதிகமாக நீளும் உலக விளையாட்டு கோலாகலமான ஒலிம்பிஸ் போட்டிகள் இன்று லண்டனில் துவங்குகின்றன. இன்று நள்ளிரவு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக பிரிட்டீஷ் ராணி எலிசபத் துவக்கி வைக்கிறார். இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் 120 நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
உலகின் மாபெரும் விளையாட்டு கோலகலமான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கிரேக்க நாட்டில் 2700 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய இப்போட்டி, 1896ல் இருந்து நவீன ஒலிம்பிக் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒலிம்பிக் போட்டியையொட்டி லண்டன் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்பட புகழ் இயக்குனர் டேனி பாயல் வடிவமைத்துள்ள தொடக்க விழா நிகழ்ச்சிகள், ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமான வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இசை, நடன கலைஞர்கள் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். தமிழ் இசை அமைப்பாளர் இளையராஜா, ஆஸ்கார் விருதுப்பெற்ற ஏ.ஆர்.ரகுமான் பாடல்களும் இடம் பெற உள்ளன.
மொத்தம் 204 நாடுகளை சேர்ந்த 10,490 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். இந்தியா சார்பில் 81 பேர் அடங்கிய அணி களமிறங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். பீஜிங் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை படைத்த அபினவ் பிந்த்ரா, குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தர், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பாக்சிங் வீராங்கனை மேரி கோம், பேட்மின்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்னிஸ் நட்சத்திரங்கள் பயஸ், பூபதி, சானியா, வில்வித்தையில் நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 81 பேர் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
தொடக்க விழாவை காண உலகத் தலைவர்கள், திரைப்பட, விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என 80,000 பேர் இன்று ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் குவிவதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லண்டன் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அதிரடிப்படை கமாண்டோக்கள், ராணுவ வீரர்கள், தனியார் நிறுவன காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர விமானப் படை மற்றும் கப்பல் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி இன்றிரவு 1.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா அதிகாலை 4.30 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment