Tuesday, July 17, 2012

துபாய்:அமெரிக்க கப்பற்படையின் வெறிச்செயல் – துப்பாக்கிச்சூட்டில் தமிழர் பலி!


Indian(Tamil)  fisherman killed in US Navy firing off Dubaiதுபாய்:அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்க கப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.

பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மீன் பிடித்தலுக்கு உபயோகிக்கும் 9 மீட்டர் அகலம் கொண்ட 3 எஞ்சின்களை உடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

நான்கு இந்தியர்களும், இரண்டு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்தவர்களும் படகில் இருந்தனர். இதுக்குறித்து அமெரிக்க கப்பல் படையின் பஹ்ரைன் 5-வது தொகுதியின் செய்தி தொடர்பாளர் லெஃப்டினண்ட் கிரேக் ராயில்சன் கூறியது: ‘அமெரிக்காவிற்கு சொந்தமான USNS Rappahannock எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயிலிருந்து புறப்பட்டது. இக்கப்பல் பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மீன்பிடி படகு ஒன்றில் நான்கு பேர் அமெரிக்க எண்ணெய் கப்பலை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தை பார்த்து அமெரிக்க கப்பற்படையினர் அவர்களை எச்சரித்தனர். எனினும் அவர்கள் படகு எதிர்நோக்கி வந்தது. தற்காப்புக்காக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் பலியானார். படகினை சிறைபிடித்த அமெரிக்க கப்பல் படையினர் மர்ம படகினை ‌சோதனை நடத்தினர். படகில் 4 இந்தியர்கள், 2 துபாயைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் ஏதோ பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்த ஈரானியர் என தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.’ இவ்வாறு அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க படையினரை புதிதாக பீடித்துள்ள ஈரானிய ஃபோபியாவால் தாயகத்தை விட்டு அந்நிய நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற அப்பாவி தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகளும், தமிழக அரசியல் கட்சிகளும் என்ன பதில் கூறப்போகிறார்கள்?

நன்றி : தூது ஆன்லைன்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza