வாஷிங்டன்:மேற்காசியாவில் தங்களின் உளவு வேலைகளுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக சி.ஐ.ஏ கருதுகிறது. இத்தகவலை அமெரிக்க உயர் உளவுத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ்செய்தி வெளியிட்டுள்ளது.
பாரம்பரிய நண்பர்களான அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே அவநம்பிக்கை துளிர்விடுவதை இச்செய்தி தெரியப்படுத்துகிறது.
இஸ்ரேலில் சி.ஐ.ஏ உளவாளிகளின் வீடுகள் தாக்கப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறியதைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது. சி.ஐ.ஏவின் மேற்காசிய விவகாரத்துறை தலைவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகவல் தொடர்பு உபகரணங்களை சேதப்படுத்தியது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட காரணமாகும்.
இஸ்ரேலுக்கு தெரியாமல் உபகரணங்கள் சேதமடைய வாய்ப்பில்லை என சி.ஐ.ஏ கருதுகிறது. தங்களின் தலைமையகத்தில் தகவல் தொடர்புக்கு உபயோகிக்கும் உபகரணங்கள் தாக்கப்பட்டதை பாரதூரமான பிரச்சனையாக சி.ஐ.ஏ கருதுகிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக ரகசிய புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வதில் கூட அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டணி நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் இடம்பெறாது என்பதை அசோசியேட் ப்ரஸ் வெளியிட்ட செய்தியின் மூலம் தெரியவருகிறது.
ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சர்வதேச கூட்டமைப்பில் இஸ்ரேல் இடம்பெறாதது இதனை சுட்டிக்காட்டுகிறது. ரகசிய தகவல்களை பரிமாறிக்கொள்வது, பரஸ்பரம் உளவு வேலைகளை நடத்தக்கூடாது ஆகியவற்றை உறுதிச்செய்யும் கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment