பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று இராமநாதபுரத்தில் ஒற்றுமைப் பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக அனுமதியும் பெறப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தடியடி தாக்குதலையும் நடத்த துவங்கினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி ரப்பர் குண்டுகள் பிரயோகப்படுத்தப்பட்டு கண்மூடித்தனமாக தாக்கி ஒற்றுமைப் பேரணி நடக்கும் இடத்தை கலவர பூமியாக மாற்றினர். இதில் வழக்கறிஞர்கள், புகைப்படக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள் என 5௦ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காவல்துறையின் திட்டமிட்ட சதியினை உணர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அசம்பாவிதம் தொடராமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சியை மேலும் தொடராமல் ரத்து செய்து வந்திருந்த அனைவரையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.