Thursday, February 27, 2014

இராமநாதபுரம் தடியடி குறித்து IG அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - DGP க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று இராமநாதபுரத்தில் ஒற்றுமைப் பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக அனுமதியும் பெறப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தடியடி தாக்குதலையும் நடத்த துவங்கினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி ரப்பர் குண்டுகள் பிரயோகப்படுத்தப்பட்டு கண்மூடித்தனமாக தாக்கி ஒற்றுமைப் பேரணி நடக்கும் இடத்தை கலவர பூமியாக மாற்றினர். இதில் வழக்கறிஞர்கள், புகைப்படக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள் என 5௦ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காவல்துறையின் திட்டமிட்ட சதியினை உணர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அசம்பாவிதம் தொடராமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சியை மேலும் தொடராமல் ரத்து செய்து வந்திருந்த அனைவரையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.


இது சம்மந்தமாக, பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிவிசாரணை நடத்த வேண்டும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் மற்றும் தனியார் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க வேணடும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் சங்க துணைச்செயலாளர் மற்றும் SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் முஹம்மது அப்பாஸ் 18.02.2014 அன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஒருவார காலமாக நடந்து வந்தன. இன்று இறுதி வாதம் நீதிபதிகள் சுதாகரன் மற்றும் வேல்மணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தனர்.

  • பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் விதமாக இராமநாதபுரத்தில் கடந்த பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற ஒற்றுமைப் பேரணியில் (யூனிட்டி மார்ச்) காவல்துறை நடத்திய தடியடி சம்பவம், அதில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து IG அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என DGPக்கு உத்தரவிட்டனர்.

  • மேலும் போலீஸ் குறிவைத்து தாக்கியதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் நஜ்முதீன் தன்னைத் தாக்கிய ADSP வெள்ளைத்துரை, DSP அண்ணாமலை ஆழ்வார் மற்றுமுள்ள அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக் கோரி IG, DGP மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிய புகாரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.”


எனவே DGP நியமிக்க இருக்கும் விசாரணை அதிகாரி நேர்மையான மற்றும் நடுநிலையான அதிகாரியாக இருக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் இதில் தலையிட்டு நியாயமான அதிகாரியை நியமிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.
மேலும் காயம்பட்ட அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் காயம்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றுள்ளனர் மற்றும் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே தமிழக அரசு காயம்பட்ட அனைவரது மருத்துவ செலவுகளையும் ஏற்க வேண்டும் மற்றும் இழப்பீடாக காயம்பட்ட அனைவருக்கும் தலா ரூ. 2 இலட்சம் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு
 
ஏ. எஸ். இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza