கொக்ராஜர்:புனித ரமலானின் துவக்கத்தில் இருந்து போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் அபயம் தேடியுள்ளனர்.
கொக்ராஜர் மாவட்டத்தில் இருந்து துப்ரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அபயம் தேடிச் சென்றுள்ளனர்.
பிரதமர், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் வந்து சென்ற புட்கான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு அருகில் உள்ளது போரோபித்யா பள்ளிக்கூடம். இங்கு 1266 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இங்கு மாலை 6.10க்கு நோன்பு திறக்கும் இஃப்தார் நேரமாகும். ஆனால், முஸ்லிம்கள் தங்கியுள்ள அப்பள்ளிக்கூடத்தில் இஃப்தார் நேரத்தில் உணவு தயாராவதற்கான எவ்வித பரபரப்பும் காணப்படவில்லை. உணவு தயாரான பாத்திரங்கள் இல்லை. ஆனால், பள்ளிக்கூட திண்ணையில் பசியால் வாடி சுருண்டு கிடக்கும் குழந்தைகளைத்தான் காணமுடிந்தது. பள்ளிக்கூட முற்றத்தில் உள்ள விறகு எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தண்ணீர் மட்டும் கொதிக்கிறது.
