Friday, August 3, 2012

இனிக்கும் இல்லறம்-10

இனிக்கும்இல்லறம்1
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் என்ற நபித்தோழி, உஹது போர்க்களத்தில் இருந்து திரும்பிய நபி(ஸல்…) அவர்களை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா(ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
ஒரு கணவன் தனது மனைவியின் உள்ளத்தில் எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கிறான் என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்று நிகழ்வே நமக்கு புரிய வைக்கும். நாம் நமது துணையின் உள்ளத்தில் நீங்காத இடத்தை பிடிக்கவேண்டும்.

பரஸ்பரம் அன்பும், பாசமும், பிணைப்பும், அரவணைப்பும், ஆறுதலும் நிறைந்து காணப்படும் தம்பதியினரின் இல்லற வாழ்க்கை என்பது இந்த பூலோக வாழ்க்கையில் சுவனமாக மாறும் என்பதை முந்தைய தொடர்களில் நாம் கண்டோம்.
இன்றைய உலகில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் திருமணம் முடிக்கின்றார்கள். ஆனால், அனைவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை நாம் உறுதியாக கூறிவிட இயலாது. அழகு, அந்தஸ்து, புகழ், பணம், பதவி எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாததுபோல் வாழும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெயருக்காகவும், புகழுக்காகவும், ஊர், உலகத்திற்காகவும் வாழ்வது அல்ல குடும்ப வாழ்க்கை. பரஸ்பரம் அன்பும், பாசமும் பிணைந்து காணப்படுவதுதான் இல்லற வாழ்க்கையின் வெற்றியாகும்.
எந்த ஆண்மகனின் வாழ்க்கையும் பூரணமடைவது ஒரு பெண்ணின் மூலமாகும். இவ்வுலகம் முழுவதும் வாழ்க்கையின் வளங்கள் என்றும், அதில் சிறந்தவர் நல்ல மனைவி என்றும் நபி(ஸல்…) அவர்கள் கூறியுள்ளார்கள். திருமண வயதை அடைந்தவர்களிடம் அதற்கான தூண்டுதலை நபி(ஸல்..) அவர்கள் ஏற்படுத்தினார்கள். மனித வாழ்க்கையில் ஏராளமான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அதில் முக்கியமானதும், ஆழமானதும் திருமணம் ஆகும். அது உறுதியான ஒப்பந்தம் ஆகும்.
கணவனின் திருப்தியை பெற்றவளாக மனைவி தனது வாழ்வின் கடைசி வரை திகழவேண்டும். கணவனின் விருப்பங்களை நிறைவேற்றி பொறுமையுடன் வாழ்க்கை எனும் ஓடத்தை செலுத்த கூடியவளாக மனைவி மாறவேண்டும். இத்தகைய குணத்தைதான் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களின் மனைவி ஹாஜராவும்(அலை), இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி கதீஜா(ரலி)அவர்களும் கடைப்பிடித்து ஒழுகினார்கள்.
பொறுமைதான் பெண்மையின் அழகாகும். வரலாற்றில் வைரவரிகளால் எழுதப்பட்டுள்ள நபித் தோழியர்களின் வாழ்க்கையை நாம் ஏறிட்டுப்பார்த்தால் ஒவ்வொரு பெண்மணியும் தியாகத்தில் பூத்த செம்மலர்கள் ஆவர்.
இன்று பழைய வாழ்க்கை சூழல் இல்லை. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தாம் பெரும்பாலான குடும்பத்தில் காணப்படுகின்றனர். இவ்வாறு தாய் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பெண், தனது புகுந்த வீட்டில் அதனை விட சுகமான வாழ்க்கையை நாடி வருகின்றாள். தனக்கு சுகமான வாழ்க்கை புகுந்த வீட்டில் கிடைக்காவிட்டால் விவாகரத்துதான் என்ற மனோநிலை இன்றைய சமூக சூழலில்  ஆங்காங்கே காணப்படுகிறது.
சேவைதான் பெண்களுக்கு நல்லதொரு ஆபரணமாகும். மனைவி இல்லாத ஒரு தினம் கூட மிகவும் சிரமமாக இருக்கும் வகையில் பரஸ்பரம் மானசீகமாகவும், சரீரகமாகவும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும்பொழுதே இல்லறம் இனிமையை அடையும்.
உண்மையில் பெண்ணின் வாழ்க்கை மெழுகு திரி போன்றது. சிறு வயதில் பெற்றோர்களுக்கு செய்யும் சின்ன சின்ன சேவைகள் என துவங்கி கணவனுக்கும், பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அண்டை அயலாருக்கும், சமூகத்திற்குமாக அவளுடைய சேவை பரந்து விரிந்தது ஆகும். ஆனால் பல பெண்களுக்கு சேவையின் இறுதியில் இவ்வுலகில் கிடைக்கும் பலனோ உடைந்து போன உள்ளமும், கண்ணீர் துளிகளுமாகும்.
மனைவி என்ற பதவி சேவையின் மறுபெயராகும். சொந்த விருப்பங்களையும், கனவுகளையும் தனது கணவனுக்காக மாற்றிவைக்கும் மனைவி தனது குழந்தைகளுக்காக ஊணும், உறக்கமும் கூட சிலவேளைகளில் தியாகம் செய்கிறாள். தம்பதியினர் இடையே நாம் எவ்வளவுதான் இல்லற வாழ்க்கையின் இனிமையில் இருவரின் பங்கினை குறித்து சிலாகித்து கூறினாலும், மனைவி தனது கணவனை விட சற்று கூடுதலாக பொறுமையை கடைப்பிடித்தாலே குடும்பம் எனும் ஓடம் அமைதியாக நகர்ந்து செல்லும்.
விட்டுக்கொடுத்தல் இதனைக் குறித்து முந்தைய தொடரில் கண்டோம். இல்லறத்தில் மனைவியே அதிகமாக விட்டுக் கொடுக்கிறாள். விட்டுக் கொடுத்தல் பெண்ணிற்கு ஒரு பரீட்சையாகும். கணவனும், கணவனுடைய் வீட்டார்களும் ஆதிக்க மனப்பான்மையுடன் அடக்கியாள முற்படும் வேளையில் எதிர்த்து நின்று போராடும்போது கிடைப்பது அல்ல பெண்ணின் வெற்றி. விட்டுக்கொடுத்து சாந்தமாக தன்னடக்கத்துடன் நடந்துக்கொள்ளும் வேளையில் அவள் கணவனை மட்டுமல்ல கணவன் வீட்டாரின் உள்ளங்களையும் வென்றுவிடலாம்.
இல்லறம் என்பது லாட்டரிச் சீட்டில் விழும் பரிசு போல அதிர்ஷ்டம் அல்ல. தனது துணையிடமிருந்து திருடும் உரிமையும் அல்ல. இல்லறம் ஒரு புனிதப் பணியாகும். பரஸ்பரம் இணைந்து வாழும் பொழுது அது புனிதமாக மாறுகிறது. தனது துணைவிக்கு வாயில் ஊட்டும் ஒரு பிடி உணவும் நல்லறம் என நபி(ஸல்..) அவர்கள் கூறிய பொன்மொழி இங்கு நினைவுக்கூறத்தக்கது. அதுமட்டுமல்ல கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்யம் கூட நல்லறம் என இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது.
தனது மனைவிக்கு அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும் கணவன், தனது கணவன் மீது காதலும், சேவை மனப்பான்மையும் கொண்ட மனைவி-இவைதான் இல்லற வாழ்வின் கயிற்றை இறுக பிணைக்கும் இரண்டு நூலிழைகளாகும். உழைத்து சம்பாதித்து மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உணவு, உடை உள்ளிட்ட அவர்களது தேவைகளை நிறைவுச் செய்யும்போது ஒரு குடும்ப தலைவனுக்கு அதில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு எல்லைகள் இல்லை. இது தனது குழந்தையை அன்போடு அரவணைத்து அமுதூட்டி பாசத்தை பகிர்ந்தளிக்கும் போது ஒரு தாய்க்கு ஏற்படும் ஆத்ம திருப்தியின் மற்றொரு பிரதிபலிப்பாகும். அப்பொழுது மனைவியானவள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் தனது கணவனையும் நன்றியுணர்வோடு காணவேண்டும். இதனால்தான் இவ்வுலகில் இறைவனை தவிர வேறு எவருக்கும் ஸுஜுது(சிரம்பணிதல்) செய்வதாக இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு ஸுஜூது செய்ய பணித்திருப்பேன் என நபி(ஸல்…) அவர்கள் கூறினார்களோ? இங்கு கணவன் மனைவிக்கு உற்றத் தோழனாகவும், மனைவி கணவனுக்கு உற்ற தோழியாகவும் மாறுகின்றார்கள்.
இயற்கையாகவே இறைவன் ஆண், பெண்ணிற்கு அளித்துள்ள பண்பு நலன்களை தம்பதியினர் புரிந்துகொள்ள வேண்டும். மனைவியை நிர்வகிப்பது கணவனின் பொறுப்பு. இதனை ஆதிக்க சிந்தனையாகவோ, பாரபட்சமாகவோ கருதாமல் பொறுப்பான பாதுகாப்பு உணர்வாகவே கருதவேண்டும். மனைவிக்கு உணவு,உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து வகையான தேவைகளையும், பொருளாதார பொறுப்புகளையும் நிர்வகிப்பது கணவனையே சாரும். கணவனிடமிருந்து  அன்பும், பாதுகாப்பும், கவனிப்பும் கிடைக்கும் போதுதான் ஒரு மனைவியால் நல்லதொரு குடும்ப தலைவியாக மாற முடியும்.
ஆண்,பெண் இரு பாலருக்கும் இயற்கையாக அமைந்துள்ள குணநலன்களும், குடும்ப சூழல்களும் வித்தியாசமாகவே அமைந்திருக்கும். ஆகவே நமது சூழலுக்கு தக்கவாறு குடும்ப வாழ்வை நடத்திச்செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். தம்பதியினர் பரஸ்பர தங்களது நிறைகுறைகளை ஒப்புக்கொள்ளவேண்டும்.
“நான் இப்படித்தான். என்னிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் என்னிடம் பழகினால் போதும்” என்ற மனோநிலையை இருவரும் கைவிடல் வேண்டும். ஒருவருடைய தனித் தன்மையையும், குணநலன்களையும் தீர்மானிப்பது அவருடைய குடும்ப பாரம்பரியமும், சுற்றுச் சூழலுமாகும். இதையெல்லாம் மாற்றமுடியாது என்று கருதகூடாது.
“ஒரு சமுதாயம் தன்னை மாற்றாதவரை அல்லாஹ் அவர்களை  மாற்றமாட்டான்” என்ற திருக்குர்ஆன் வசனத்தில் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கணவனின் வீட்டில் மனைவிக்கு குடும்பத் தலைவி என்று பெயர். ஒவ்வொரு வீட்டிலும் வித்தியாசமான குணநலன்களை கொண்டோர் இருப்பர். இதனை புரிந்துகொண்டு நடந்துகொண்டால் குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஆனால், குடும்ப வாழ்வை சுமையாக கருதுதல், பொறுமையின்மை, வாழ்க்கையை குறித்த ஊனமான சிந்தனை, சுயநலம் ஆகிய காரணங்களால் பெரும்பாலான பெண்கள் குடும்ப வாழ்வில் தோல்வியை தழுவுகின்றனர்.
உறவினர்களின் அதீத தலையீடு சில தம்பதியரின் இல்லற வாழ்க்கையை சிதைத்து விடுவதும் உண்டு. நிக்காஹ்(திருமண ஒப்பந்தம்) வேளையில் புதுமண தம்பதியரின் நன்மைக்காக கேட்கும் துஆ வெறும் வார்த்தைகள் அல்ல. குண நலன்களிலும், கலாச்சாரத்திலும், பொருளாதார சூழல்களிலும் மாறுபட்டவர்கள் இல்லறத்தில் இணையலாம். அதனை புரிந்துகொண்டு அவர்களின் இல்லற வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தருவது குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
உள்ளத்திற்கு ஒரு திரை உண்டு. அதைப் போலவே வீட்டிற்கும் உண்டு. ஒவ்வொரு வீட்டிற்கு நான்கு சுவர்கள் ஒரு திரையாகும். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அவற்றுக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் தமது பிள்ளைகளுக்கு தாய்-தந்தையாக மாறப் போகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கணவன் – மனனவி இடையே பிரச்சனைகள் எழலாம். அவற்றை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது அந்தரங்க தகவல்களை நான்கு சுவரை தாண்டி கொண்டு செல்வது விரும்பத்தக்கது அல்ல.
திருக்குர்ஆனில் வல்ல இறைவனான அல்லாஹ் கணவன் – மனைவிக்கு மிக அழகான ஒரு உதாரணத்தை கூறுகிறான்.
“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்…”. 2:187
ஆடை தொடர்பாக நாம் கடைப்பிடிக்கும் ஒழுங்குகளை இல்லற வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஆடை விஷயத்தில் நாம் கடைப்பிடிக்கும் காரணிகள் என்ன?
ஆடை நமது மானத்தை மறைக்கவேண்டும்
ஆடை நமக்கு அளவாக இருக்கவேண்டும்.
ஆடை நமது தகுதிக்கு தக்கவாறு அமையவேண்டும்
ஆடை நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கண்ணியத்தையும் பறை சாற்றவேண்டும்
இவ்வளவு விஷயங்களையும் ஆடை விஷயத்தில் நாம் கவனம் செலுத்தும்போது இறைவன் ஆடையாக உவமானித்து கூறும் இல்லறத்தில் நாம் எவ்வளவு பேணுதலை கடைப்பிடித்தாக வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆடை எவ்வாறு நமது மானத்தை மறைத்து நமது அந்தரங்கங்களை காப்பாற்றுகிறதோ அதைப்போலவே கணவன் – மனைவி இருவரும் தமது கற்பு விவகாரத்தில் கண்டிப்பான பேணுதலை கடைப்பிடிக்க வேண்டும். ஆடை எவ்வாறு நமது உடல் குறைபாடுகளையும், மானத்தையும் மறைக்கிறதோ அதைப்போலவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் பிறரது குறைகளை பகிரங்கப்படுத்தாமல் இருத்தல் அவசியமாகும். நமது ஆடை எவ்வளவு கண்ணியமாகவும், நமது அந்தஸ்தையும், கண்ணியத்தையும் வெளிப்படுத்துவிதமாக அமையவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோமோ அதைப்போலவே நமது இல்லற வாழ்க்கையும் கண்ணியமாகவும், பண்பாட்டுடன் அமையவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
நமது ஆடையில் அழுக்கோ, கறையோ படிந்தால் அதனை அகற்றுவதற்கு நாம் முயல்வோம். உதாரணமாக விலை உயர்ந்த ஆடை ஒன்றை நாம் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வாங்கிய மறுநாளே அதில் ஏதேனும் கறை பட்டிருக்கலாம். தையல் விடுபட்டிருக்கலாம். உடனே நாம் அந்த கறையை நீக்க முயல்வோம். தையல் விடுபட்ட இடத்தில் மீண்டும் தையல் போட்டு அந்த ஆடையை கவனமாக பாதுகாப்போம். அதைப்போலவே இல்லறம் என்ற ஆடை மிகவு விலை மதிப்பற்றதாகும். அதனை மிகவும் கண்ணியமாக பாதுகாத்திட வேண்டும். அதில் சில குறைகள் தென்படலாம். அதற்காக அதனை தூக்கி வீசிவிடக் கூடாது. கணவனிடம் காணப்படும் குறைகளை இதமாக எடுத்துக்கூறி அதனை களைய முற்படவேண்டும்.
மனைவியிடம் காணப்படும் குறைகளை அழகாக எடுத்தியம்பி அவளை திருத்த கணவன் முனையவேண்டும். அதற்காக தீவிரமான நடவடிக்கைகளில் கணவன் இறங்கிவிடக் கூடாது இவ்விடத்தில் அல்லாஹ்வின் இறுதி தூதரின் பொன்மொழி நமக்கு படிப்பினையாக அமையட்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்: “எந்தவொரு முஃமினான ஆணும் (தன் மனைவியான) முஃமினான பெண்ணிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தியுறட்டும்”
இல்லற வாழ்க்கைக்கு பெரியதொரு இடுக்கண்ணாக மாறுவது சந்தேகம். அதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு நாள் விவாதிப்போம்…

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza