Sunday, August 5, 2012

நாடு கடும் வறட்சியை நோக்கி!

வறட்சி!
புதுடெல்லி:அண்மைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா கடும் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பருவ மழை அதிகம் பெய்யாதது வறட்சிக்கு காரணமாகியுள்ளது.
2009-ஆம் ஆண்டு கடைசியாக இந்தியாவை வறட்சி பாதித்தது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் இம்மாதம் 1-ஆம் தேதி வரை 20 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. இது 23 சதவீதம் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் முதன் முறையாக பருவ மழை குறைவாக பெய்துள்ளது. பருவ கால மழை பொய்த்ததால் காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறத் துவங்கியுள்ளது.

சர்க்கரை, பயறு வகைகள், தானியங்கள் ஆகியன வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிச் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாண்டு 471.4 மில்லி லிட்டர் மழை பெய்யவேண்டிய இடங்களில் 378.8 மில்லிலிட்டர் மழை மட்டுமே பெய்ததாக காலநிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் லட்சுமண் சிங் ராத்தோர் கூறுகிறார். இதனால் பயறு வகைகளின் சாகுபடி அதிக அளவில் பாதிக்கப்படும். பூமியில் அசாதாரணமான பருவநிலை மாற்றங்களுக்கு காரணமாகும் எல் நினோ என்ற நிலை பருவகால மழையை கடுமையாக பாதித்துள்ளது வறட்சிக்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
பருவ மழை குறைவாக பெய்ததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேசிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டின் 6.5 சதவீதத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதமாக குறையும் என கருதப்படுகிறது. விவசாய துறையில் வளர்ச்சி அதிகமாக குறைவது பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவாக மாறும் என அலுவாலியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் மஹராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் 640 மாவட்டங்களில் 400 மாவட்டங்களில் பெய்யும் மழை பெருமளவில் குறைந்துள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 2009-ஆம் ஆண்டு 225 மாவட்டங்களில் மட்டுமே மழை குறைவின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. பருவமழை பொய்த்ததால் குடிநீர், மின்சாரம் ஆகியவையும் பாதிக்கப்படும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza