காஸா: கடந்த சனிக்கிழமை (12/01/2013) ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமி அபூ ஸுஹ்ரி இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமொன் பெரஸைக் கடுமையாக விமர்சித்துக் கருத்துரைத்துள்ளார்.
அண்மைக் காலமாக முன்னாள் பலஸ்தீன் தலைவர் யாஸர் அரஃபாத்தின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அரஃபாத்தின் மனைவியின் ஒத்துழைப்புடன் அல்ஜெஸீரா செய்தி நிறுவனம் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் விளைவாக மறைக்கப்பட்ட பல உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின.
2004 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் மரணமடைந்த யாஸர் அரஃபாத்தின் மரணம் இயற்கை மரணமல்ல என்றும், அவரைக் கொலை செய்ய பொலோனியம் என்ற விஷத்தன்மை வாய்ந்த ஒருவகைக் கதிரியக்கப் பொருள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கொலையின் பின்னணியில் இருப்பது இஸ்ரேல்தான் என்ற குற்றச்சாட்டு மிகப் பரவலாக முன்வைக்கப்பட்டது. முன்னர் ஒரு தடவை ஜோர்தானில் வைத்து இதே இரசாயனப் பொருளைப் பயன்படுத்தி ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மிஷைலைக் கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டமையும், குறித்த இரசாயனப் பொருளுக்கான மாற்று மருந்தை வேறுவழியின்றி இஸ்ரேல் காலித் மிஷைலுக்கு வழங்க நேர்ந்தமையும் இக்குற்றச்சாட்டுக்கான வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, "இக்குற்றச்சாட்டு குறித்து, ' முன்னாள் பலஸ்தீன் அதிகார சபைத் தலைவர் அரஃபாத்தின் கொலை தவறுதலாக நிகழ்ந்துவிட்ட ஒன்று' என்று இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமொன் பெரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையானது, அக்கொலைக் குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்துள்ளது" என கலாநிதி ஸமி அபூ ஸுஹ்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னுடைய முகநூல் பக்கத்தில் அபூ ஸுஹ்ரி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "இதுவரை காலமும் மிக உக்கிரமாக நிகழ்ந்துவந்த வாதப் பிரதிவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலேயே ஷிமொன் பெரஸின் அறிக்கை வெளிவந்துள்ளது. இதன் மூலம், முன்னாள் பலஸ்தீன் தலைவர் யாஸர் அரஃபாத்தின் கொலையில் இஸ்ரேல் கொண்டுள்ள நேரடித் தொடர்பு பகிரங்கமாகியுள்ளது. எனவே, இக்கொலைக் குற்றம் தொடர்பில் இஸ்ரேல் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பலஸ்தீன் அதிகார சபை முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: inneram
0 கருத்துரைகள்:
Post a Comment