Sunday, January 13, 2013

பாம்பனில் தரை தட்டிய கப்பல் ரெயில் பாலத்தில் மோதியது: ரெயில் போக்குவரத்து பாதிப்பு


இந்திய கடற்படைக்கு சொந்தமான பார்ஜர் கப்பல், அதனை இழுத்து வந்த இழுவை கப்பல் கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்ல பாம்பன் வடக்கு கடல் பகுதிக்கு வந்தன.
இந்த கப்பல்கள் துறைமுக அதிகாரிகளின் அனுமதி பெற்று பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. கடந்த 10-ந்தேதி முதல் பலத்த காற்று வீசியதால் 2 கப்பல்களின் நங்கூர கயிறு அறுந்து பாறையில் மோதி தரை தட்டி நின்றன. இதனைத் தொடர்ந்து தரை தட்டிய 2 கப்பல்களையும் பாம்பன் துறைமுக அதிகாரிகள், மீனவர்கள் உதவியுடன் மீட்க முயன்றனர்.
கடந்த 3 நாட்களாக விசைப்படகுகள் மூலம் கயிறு கட்டி தரை தட்டிய கப்பல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஒரு கப்பல், காற்றின் வேகத்தால் தள்ளப்பட்டு ரெயில் பாலத்தில் மோதிவிடும் அபாயத்தில் நின்றது. நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் பலத்த காற்று வீசியதால் அந்த கப்பல் ரெயில் பாலத்தில் டமார் என்று மோதியது. இதில் இரும்பு தூண் ஒன்று சேதம் அடைந்தது.
ரெயில் பாலம் சேதம் அடைந்ததால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற பயணிகள் ரெயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பஸ்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.
அதுபோல் சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. மிதவை கப்பல் ரெயில் பாலத்தில் மோதியதை தொடர்ந்து பாம்பன் பால பராமரிப்பு பணி துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza