துருக்கி வியாழக்கிழமை சிரியா நாட்டு எல்லையை நோக்கி பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது. சிரியாவுக்குள் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தம், இந்த தாக்குதலுடன், இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாக மாறியுள்ளது.
சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி நாட்டு நாடாளுமன்றம் அனுமதி கொடுத்து தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே, இன்றைய தாக்குதல்கள் நடைபெற்றன. துருக்கி ராணுவம் மேற்கொண்ட ஆட்டிலரி தாக்குதலில், எல்லைக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பல சிரிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல், சிரியா நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (புதன் கிழமை) சிரியா ராணுவத்தின் பீரங்கிகள், துருக்கியின் தென்கிழக்கு பகுதி கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தின. சில நிமிடங்களே இடம்பெற்ற இந்த தாக்குதல், அதன்பின் நிறுத்தப்பட்டது. தமது ராணுவம் தவறுதலாக அந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும், தவறை உணர்ந்து, தாக்குதலை நிறுத்தி விட்டதாகவும், சிரியா அரசு, ஐ.நா. ஊடாக துருக்கிக்கு தகவல் அனுப்பியது.
துருக்கி அந்த சமாதானத்தை ஏற்கவில்லை என்பது, இன்றைய தாக்குதலில் தெரிகிறது.
“நாம் (துருக்கி) யுத்தத்தை நாடிச் செல்லவில்லை. ஆனால், எமது நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, நாம் திருப்பி தாக்காமல் சும்மா இருக்க முடியாது” என்று கூறியுள்ளார், இப்ராஹிம் காலி்ன். இவர் துருக்கி பிரதமரின் சீனியர் ஆலோசகர்.
இந்த தாக்குதலுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உரசல், யுத்தமாக மாறியிருக்கிறது. யுத்தம் தொடருமா அல்லது, சிரியா அடக்கி வாசிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


0 கருத்துரைகள்:
Post a Comment