Friday, October 5, 2012

24 கேரட் தங்கத்தை பாக்டீரியாவால் உருவாக்கலாம் !


தங்கத்தின் தூய்மையை கேரட் அளவீடுகளில் சொல்வதுண்டு. மிக மிக தூய்மையானதாக  24 கேரட் தங்கம் என்று சொல்வார்கள்.

இந்த சொக்கத் தங்கத்தை பாக்டீரியா ஒன்றை வளர்ப்பதைக் கொண்டு உருவாக்க முடியும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு பிரதானமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ஈஸ்ட் லான்சிங் நகரில் உள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் நுண் உயிரியல் மற்றும் மூலக்கூறு மரபியல் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர்.


இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த பாக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. மேலும்மேலும் தங்க குளோரைடை இந்த பாக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர். பின்னர்  ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது கண்டறியப்பட்டது.

இப்பல்கலைக்கழக நுண் உயிரியல் பேராசிரியர் கசம் கஷேபி கூறுகையில் பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு @ நீர்மத் தங்கம் என்னும் வேதிப்பொருளில் வளர்கிறது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற இரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆயினும் இந்தத் தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதாகவும் சவாலானதாகவும் அமையும். அஃதன்றி  பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்

இந்த அதிசய கண்டுபிடிப்பை ஆஸ்திரியாவில்  நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா’ என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு கலைப்பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘The great work of metal lover’ என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த நுண் உயிரியல் விஞ்ஞானிகள் இதை பார்த்து வியப்பு  அடைந்தனர்.

தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்.. சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா.. என்றெல்லாம் சர்ச்சைகள் களை கட்டத் தொடங்கிவிட்டன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza