ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி ரோஷினி பாத்திமா மாநில அளவிலான தடகளப் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் முதலிடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து பாராட்டுப் பெற்றார்.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த அலிகார்கானின் மகள் ரோஷினி பாத்திமா. புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர், தமிழ்நாடு தடகள கழகம் கோயம்புத்ததூர் நேரு ஸ்டேடியத்தில் அண்மையில் நடத்திய 16 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில், தொடர் ஓட்டப்பிரிவில் 1000 மீ. தூரத்தை 2 நிமிடம் 2 விநாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதற்கான சான்றிதழை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் நேரில் காண்பித்து அவரது வாழ்த்துக்களைப்பெற்றார். மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தமைக்காக ஆட்சியர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
இம்மாதம் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் அகில இந்திய இளநிலை தடகளப் போட்டியில் பங்கேற்கப் போவதாகவும் ரோஷினி பாத்திமா தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசமும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


0 கருத்துரைகள்:
Post a Comment