Monday, October 8, 2012

என்று தணியும் இந்த ஜாதிக் கொடுமைகள்? ஹரியானாவில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான தலித் இளம் பெண் தற்கொலை!

Dalit rape victim commits suicide in Haryana
புதுடெல்லி:ஹரியானாவில் நெஞ்சை உலுக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர்கதையாகி விட்டன. ஜின்ட் மாவட்டத்தில் சச்சா கேதா என்ற கிராமத்தில் ஷர்மிளா என்ற தலித் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். இதனையொட்டி கடந்த சனிக்கிழமை அந்த அபலைப் பெண் நெருப்பைப் பற்ற வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
ஹரியானாவில் கடந்த ஒரு மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. ஹிஸார், ஜின்ட், பிவானி, சோனிபத், யமுனா நகர் ஆகிய மாவட்டங்களில் கொடூரமான கூட்டுக் கற்பழிப்புகள் நடந்துள்ளன. இந்தக் கற்பழிப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் பெண்கள்தான்.

ஒரு பெண் உட்பட மூன்று அண்டை வீட்டார் ஷர்மிளா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த மாதம் ஹிஸார் மாவட்டத்தில் ஒரு தலித் இளம் பெண்ணை 12 கயவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்தக் கோரக் காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்து  பரப்பியும் உள்ளனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு மனம் தாளாமல் அந்த அபலைப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அப்படியும் ஜாதிய வெறி ஊறியுள்ள காவல்துறை கயவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்கொலை செய்து கொண்டவரின் உடலை அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கமாட்டோம் என்று உறவினர்களும், ஊர்க்காரர்களும் முரண்டு பிடித்ததைத் தொடர்ந்துதான் காவல்துறை அக்கிரமக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இன்னொரு கோரச் சம்பவம் கடந்த மாதம் 21ம் தேதி ஜின்ட் மாவட்டத்தில் நடந்தது. உறவினர்களையும், கூட இருந்தவர்களையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்து ஒரு பிற்படுத்தப்பட்ட பெண் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  இன்னொரு சம்பவத்தில் 11ம் வகுப்பு படிக்கும் இளம் பெண்ணை நான்கு பேர் கூடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தப் பிரச்னையை ஆராய்ந்து மீண்டும் இவை நிகழாமல் தடுப்பதற்கு ஹரியானா அரசு மூன்று பேர் அடங்கிய ஒரு குழுவை நியமித்துள்ளது. பெண்களுக்கெதிரான கொடுமைகளைக் களைவதில் போலீஸ் தோல்வி கண்டுவிட்டதாகவும், அக்கிரமக்காரர்களைப் பாதுகாப்பதில் போலீசே ஈடுபடுவதாகவும் திதிபோர் என்ற கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் சுனில் ஜக்லே கூறுகிறார். நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லாததால் பல வழக்குகள் போலீசுக்குப் போவதே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza