Thursday, October 4, 2012

சென்னை திருவல்லிக்கேணியில் 2 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி!

சென்னை திருவல்லிக்கேணியில் 2 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி!
சென்னை:திருவல்லிக்கேணியில் இன்று காலை 7 மணியளவில் 2 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டனர்.  இவ்விபத்தில் இருவர் பலியாயினர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள சுங்குவார் தெருவில் 2 அடுக்கு  மாடி கட்டிடம் இருந்தது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம், தியாகராஜன் (45)  என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு 15 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்தன. இந்த
கட்டிடத்தின் தரை தளமும் முதல் மாடியும் மண் மற்றும் செங்கற்களால்  கட்டப்பட்டதாகும். சமீபத்தில் 2வது மாடி கட்டப்பட்டுள்ளது. மண் வைத்து  கட்டப்பட்டதால் கட்டிடம் பலவீனமாக இருந்துள்ளது. இதையடுத்து, கட்டிடத்தையொட்டி  பில்லர்கள் அமைத்து, பலப்படுத்த தியாகராஜன் திட்டமிட்டார்.

அதற்காக வீட்டை சுற்றி பில்லர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி கடந்த சில  நாட்களாக நடந்து வந்தது. பள்ளம் தோண்டியபோது, தியாகராஜன் வீட்டு கட்டிடத்தின் பல  இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன சிலர், வீடுகளை காலி  செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டனர். தியாகராஜன் உள்பட 7 குடும்பங்கள்  மட்டும் வசித்து வந்தன.
இதனிடையே இன்று காலை 7.30 மணிக்கு, தியாகராஜன் வீடு இருந்த கட்டிடம், திடீரென  இடிந்து பக்கத்தில் இருந்த அச்சகம் மீது விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டதால்  அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிறிது  நேரத்தில் மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர். அதில் வசித்து வந்த 7 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் இடிபாடுகளில்  சிக்கினர். இவ்விபத்தில் மஞ்சு, பாரதி ஆகிய இருவர் பலியாயினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு  பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த எஸ் டி பி ஐ யினரும்  உடனடியாக  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இடிபாடுகளுகிடையில் இருவரை உயிருடன் மீட்டனர்.
சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza