புதுடெல்லி:அஸ்ஸாமில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அகதிகள் முகாமிலும் கடுமையான பாரபட்சம் காட்டப்படுவதாக மனித உரிமை ஆர்வலரும், தேசிய ஒருமைப்பாட்டுக்குழு உறுப்பினருமான ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷப்னம் ஹாஷ்மி அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் அவர் கூறியது:போடோ அல்லாத மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. சரியான உணவுகளோ, அத்தியாவசியப் பொருட்களோ கிடையாது. போடோக்கள் தங்கியுள்ள முகாம்களில் இறைச்சியும், மீனும் உள்பட பொருட்கள் விநியோகிக்கப்படும் பொழுது இதர மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் வாடுகின்றனர்.
சிகிட்சையும், மருந்துகளும் கிடைக்கவில்லை. நிவாரண திட்டங்கள் குறித்து முகாம்களில் தங்கியிருப்போருக்கு எதுவும் தெரியவில்லை. இது நிவாரண பணிகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதன் அறிகுறியாகும். நிவாரண பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி மறுவாழ்வு திட்டங்களை பின்பற்ற அதிகாரிகள் தயாராகவில்லை. சரியான முறையில் இராணுவ-போலீஸ் காவலை ஏற்படுத்தினால் 40 சதவீத அகதிகள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும். வன்முறைகள் குறித்து மிக கவனமான விசாரணையை அரசு நடத்தவேண்டும். வன்முறைகள் தொடர்பான வழக்குகளை பதிவுச்செய்வதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறைந்த வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதனால் நீதி கிடைப்பதற்கும், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு திட்டங்களும் பாதிக்கப்படும். வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது தனியாக விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.
அஸ்ஸாம் வன்முறையின் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாம் என சந்தேகிப்பதாக தேசிய ஒருமைப்பாட்டுக்குழு உறுப்பினர் நவைத் ஹமீத் கூறினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதங்களை கைப்பற்ற அரசு தயாராக வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கும், முன்னாள் போடோ கிளர்ச்சியாளர்களுக்கும் அஸ்ஸாம் இனக் கலவரத்தினால் ஆதாயம் கிடைத்துள்ளதாக நவைத் மேலும் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் குஜராத்தைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலர் ககன் சேத்தியும் கலந்துகொண்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment