இஸ்லாமாபாத்:ஹிந்து யாத்ரீகர்களை வாகா எல்லையில் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்கு செல்ல பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதற்காக 250 ஹிந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் வாகா எல்லையில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் குடியேற்றம் நடத்துவதற்காக செல்வதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து பாக்.அரசு அவர்களை எல்லையில் தடுத்து வைத்தது.
இந்தியாவிற்கு சென்றால் பாகிஸ்தானுக்கு திரும்ப வரமாட்டார்கள் என ஊடகங்களில் செய்தி வெளியானதால் அவர்களை தடுத்து வைத்ததாக பாக். அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக பேசமாட்டோம் என ஹிந்துக்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இம்மாதம் 7-ஆம் தேதி மனீஷா குமாரி என்ற இளம்பெண் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாக்கோபாபாத் நகரத்தில் கடத்தப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக ஹிந்துக்கள் இந்தியாவில் குடியேறப் போவதாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 250 ஹிந்துக்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளதாகவும், இவர்களிடம் சட்டப்பூர்வமான ஆவணங்கள் இருப்பதாகவும் லாகூரில் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி(எஃப்.ஐ.எ)யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment