புதுடெல்லி:வளர்ச்சியில் நரேந்திர மோடியின் குஜராத்தை விட நிதிஷ்குமாரின் பீகார் முன்னணியில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டியில் மோகன் பாகவத் இக்கருத்தை தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை தனது கட்டளைக்கு கீழ்படியவைக்கும் மோடியின் நடவடிக்கையில் ஏற்பட்ட வெறுப்பை மோகன் பாகவத் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் பதவி மோகம் பிடித்து திரியும் மோடிக்கு எதிராக நிதிஷ்குமார் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த வேளையில், மோடிக்கு ஆதரவாக நிதிஷ்குமாரை எதிர்த்து முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் மோகன் பாகவத் ஆவார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு விருப்பமான சஞ்சய் ஜோஷியை கட்சியை விட்டு வெளியேற்றியதில் மோடி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு மோடியின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோடியை பிரதமர் வேட்பாளராக்கினால் கூட்டணியை விட்டே விலகிவிடுவோம் என்று கடுமையான எச்சரிக்கையை நிதிஷ்குமார் விடுத்துள்ளார். பிரதமர் வேட்பாளர் மதவெறியராக இருக்க கூடாது என மோடியின் பெயரை குறிப்பிடாமல் நிதிஷ்குமார் கூறியிருந்தார். மேலும், பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மோடியை பிரதமராக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை தருமாறு நிதிஷ் கோரியிருந்தார்.
2014- மக்களவை தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு என்.டி.ஏவின் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கவேண்டும் என்று நிதிஷ்குமார் கூறியிருந்தார். மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாமல் இருக்க எதையும் செய்வோம் என்றும் தேவைப்பட்டால் கூட்டணியை விட்டே விலகுவோம் எனவும் நிதிஷ் எச்சரிக்கை விடுத்தார்.
முஸ்லிம்களின் எதிரியான மோடியை எதிர்த்தால் பீகாரில் முஸ்லிம் வாக்கு வங்கியை கவரலாம் என்பதே நிதிஷின் திட்டமாகும்.
2005 மற்றும் 2010 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை நிதிஷ்குமார் தவிர்த்தார். பீகாரில் கூட்டணியை முறிப்பது பா.ஜ.கவுக்கு பின்னடைவாக அமையும் என்பதால் நிதிஷ்குமாருடன் மோதல் போக்கை கையாள பா.ஜ.க விரும்பவில்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment