Monday, August 6, 2012

மதுரை, நாகை, இளையான்குடியில் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பு!

Popular Front of India will organise Freedom Parade at madurai, nagai and ilaiyankudi
சென்னை:வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி 65-வது சுதந்திர தினத்தன்று மதுரை, நாகை, இளையான்குடி ஆகிய நகரங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருப்பதாக அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக சென்னையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “வருகிற ஆகஸ்ட் 15 இந்தியாவின் 65-வது சுதந்திர தினமாகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும், அதில் கலந்துகொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.

இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப்படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும், நமது முன்னோர்கள் “என்ன நடந்தா நமக்கென்ன” என்று இருந்திடாமல் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடிமக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும், சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் நோக்கிலும் கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திரதின நிகழ்ச்சிகளையும், முக்கிய நகரங்களில் சுதந்திர தின அணிவகுப்பையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் நாள் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான்குடி ஆகிய நகரங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு காலித் முஹம்மது தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza