Wednesday, August 8, 2012

இனிக்கும் இல்லறம் -12

இனிக்கும்இல்லறம்1
அவர் எவ்வளவு நல்ல கணவர்!
இல்லற வாழ்வு இனிமை அடைய நாம் யாரிடம் முன்மாதிரியை தேடுவது? என்பதை ஆராய்ந்தால் இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை தவிர எவரும் பூரணமான நபர் அல்லர் என்ற முடிவுக்குத்தான் நாம் வருவோம்.
எவராலும் எட்டிப்பிடிக்க இயலாத அளவுக்கு இறைவனின் இறுதித் தூதரின் நடவடிக்கைகளும், நற்குணங்களும் அமைந்திருந்தன என்பதை வரலாற்று ஏடுகளில் நம்மால் காண இயலும்.
மனைவியருடனும், குழந்தைகளுடனும் அவர்கள் நடந்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக பெருமை பேசுபவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதத்தில் அமைந்திருந்தது.
தனது தோழர்களுடன் நபியவர்கள் பழகிய விதமும் இதில் எவ்விதத்திலும் குறைந்து போகவில்லை. ஒவ்வொரு தோழரின் உள்ளத்தை தொடும் அளவுக்கு நபிகளாரின் நற்குணங்களும், பழகும் பாணிகளும் அமைந்திருந்தன. இதனால் தான் நபித் தோழர்கள் தங்களின் உயிரை விட மேலாக நபியவர்களை நேசித்தார்கள். அவர் கட்டளையிட்டால் கடலில் குதிக்கவும் தயாரானார்கள். உன்னதமான விழுமியங்களை உள்ளத்தில் சேகரித்து வைத்திருந்த நபி(ஸல்) அவர்கள் சிறந்த ஆசிரியராகவும், சிறப்பான வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்கள். வரலாற்றில் பதிவுச் செய்யப்பட்ட ஆளுமைகளை விட மிக உயர்ந்த இடம் நபிகளாருக்கு உண்டு.

இந்த உலகில் மனிதர்களையும், அனைத்து வகையான செடி, கொடிகளையும் இன்னும் மனிதர்கள் அறியாத பலவற்றையும் அல்லாஹ் ஜோடியாகவே படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்: “பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.”(அல்குர்ஆன் 36:36)
மனிதனை ஆண், பெண் ஜோடியாக படைத்தது தனது அத்தாட்சிகளில் ஒன்றாக அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
“இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:21)
பரிசுத்த திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனத்தின் செயல் வடிவமாக நபி(ஸல்)அவர்களின் இல்லற வாழ்க்கை அமைந்திருந்தது. ஆகையால்தான் தமது தோழர்களுக்கு பெண்களை குறித்த போதனைகளை அவர்கள் தாராளமாக வழங்கினார்கள்.
அன்பு, பாசம், பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட நற்குணங்களை மனைவியருடன் பேணுமாறு நபி(ஸல்) அவர்கள் தோழர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)
நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் அழகான, உள்ளத்தை தொடும் சம்பவங்கள் பலவற்றையும் நாம் காண முடியும். நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரின் கவலைகளை புரிந்துகொண்டார்கள். அவர்களை ஆறுதல்படுத்தினார்கள்.
ஒரு முஸ்லிம் தமது வீடுகளில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன.
அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஸஃபிய்யா(ரலி) அவர்களை யூதனின் மகள் என்று ஹஃப்ஸா(ரலி) கூறினார்கள். இந்தச் செய்தி ஸஃபிய்யா(ரலி) அவர்களுக்கு கிடைத்த பொழுது அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘ஏன் அழுகிறாய்?’ என வினவினார்கள்.
‘நான் யூதனின் மகள் என ஹஃப்ஸா கூறிவிட்டார்’ என தெரிவித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ’நீ நபியின் மகள் தான். உனது சிறிய தந்தையும் நபியாக இருக்கிறார். நீ நபியின் மனைவியாக இருக்கிறாய். பிறகு எப்படி ஹஃப்ஸா உன்னிடத்தில் பெருமையடிக்க முடியும்? என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களிடம், ‘ஹஃப்ஸாவே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!’ என எச்சரித்தார்கள்.(நூல்:அபூதாவூத்).
ஒரு கணவர் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்களின் குணநலன்களை ஆயிஷா(ரலி) இவ்வாறு விளக்குகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்” (நூல்:புஹாரி)
“தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்” நூல்: அஹ்மத்
ஆட்டின் பாலை கறப்பார்கள் என்ற செய்தி முஸ்னத் அஹ்மத் நூலின் மற்றொரு அறிவிப்பில்  இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள் என்பது அவர்களது சிறந்த பண்பாட்டை காட்டுகிறது. அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் இதர மனிதர்களைப் போலவே தமது குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குவதிலும், உதவுவதிலும் அவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை.
நபி(ஸல்) அவர்கள் ஒரே பாத்திரத்திலேயே தமது மனைவியருடன் உணவை சாப்பிட்டுள்ளார்கள். ஒரே பாத்திரத்தில் பானத்தை அருந்தியுள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.
தமது மனைவியருடனான நேசத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுடன் உலாவினார்கள்.
இமாம் புகாரி, இவ்வாறு பதிவுச்செய்துள்ளார்: “இரவானால் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டு நடப்பார்கள்”
நபி(ஸல்) அவர்கள் அடிக்கடி தமது மனைவியரை புகழவும் தவறவில்லை. ஆயிஷா(ரலி) அவர்களை ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ்ந்தார்கள்: “ஆயிஷாவுக்கும் இதர பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் சாதாரண உணவும், தரீத் (இறச்சிக் குழம்பில் தோய்க்கப்பட்ட ரொட்டி-இது நபி(ஸல்) அவர்களுக்கு பிடித்த உணவாகும்)போலாகும்” (நூல்:முஸ்லிம்)
தனது மனைவியர் மீதான கருணையையும், இரக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் மறைத்து வைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. “இந்தக் கயிறு ஏன்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்” என்று கூறினார்கள்.(நூல்:புகாரி)
தனது மனைவியரின் தவறுகளை மன்னிக்கவும், சகித்துக்கொள்ளவும் நபி(ஸல்) அவர்கள் தயாராக இருந்தார்கள்.
ஒரு முறை அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி கோரினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்தபோது ஆயிஷா(ரலி) அவர்களின் உரத்த சத்தத்தைக் செவியுற்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடத்தில் சத்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி அபூபக்கர்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களை அடிப்பதற்காக பிடிக்கலானார்கள். (அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை ஆயிஷா(ரலி) அவர்களை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் கோபமுற்றவராக வெளியே சென்றார்கள். அபூபக்கர்(ரலி) வெளியே சென்ற பிறகு நான் அந்த மனிதரிடம் இருந்து எப்படி உன்னைக் காப்பாற்றினேன் என்பதை நீ கவனித்தாயா? என்று நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் பல நாட்கள்(ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல்) இருந்தார்கள். பின்பு (ஒரு முறை) அனுமதி கேட்டு(வீட்டிற்கு வந்தபோது) நபி(ஸல்) அவர்களையும், ஆயிஷா(ரலி) அவர்களையும் இணக்கமாகிக் கொண்டவர்களாக கண்டபொழுது உங்களின் சண்டையில் என்னை கலந்துக்கொள்ளச் செய்தது போல் உங்கள் இணக்கத்திலும் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் சேர்த்துக் கொண்டோம்! சேர்த்துக்கொண்டோம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூத்)
கணவன் மீது மனைவியருக்கு ஏற்படும் கோபத்தையும் நபி(ஸல்) அவர்கள் அழகாக சமாளித்து இல்லற வாழ்க்கையை இனிதே நடத்திச் சென்றார்கள்.
அனைத்து மனைவிமார்களையும் மதிப்பளிக்கவும், கவனிக்கவும் நபி(ஸல்) அவர்கள் தவறியதில்லை.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், “உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே” என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், “அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது” என்று பதில் கூறினார்கள். (நூல்:புகாரி)
தனது மனைவிமார்களிடம் இருந்து சில வேளைகளில் நபி(ஸல்) அவர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் வந்தபொழுது கூட அவர்கள் மனைவியரை அடிக்கவில்லை.
“போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை” (முஸ்லிம்)
என்ன காரணம் என்றாலும் தமது மனைவியர் அழுதால் அவர்களை ஆறுதல்படுத்தும் பண்பு நபி(ஸல்)அவர்களிடம் இருந்தது.
ஒரு ஸஃபிய்யா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் புறப்பட்டார்கள். ஆனால் அவர் நபி(ஸல்)அவர்களின் பின்னால் மெதுவாக வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நோக்கிய பொழுது ஸஃபிய்யா(ரலி) அவர்கள் அழுவதை கண்டார்கள்.
‘என்னை மெதுவாக நடக்கும் ஒட்டகத்தில் அல்லவா ஏற்றிவிட்டீர்கள்’ என தெரிவித்தார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்களது கண்ணீரை துடைத்தார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் பிரபலமான பல்வேறு நிகழ்வுகளில் நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை பங்கேற்கச் செய்தார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப் பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.
நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்,
நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப் பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப் பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.
அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப் பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியருக்கு எவ்வளவு தூரம் மதிப்பும், உரிய இடமும், கவனிப்பையும் அளித்தார்கள் என்பதும், மனைவியரிடம் மிகவும் அன்பும், நேசமும் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் மேற்கண்ட சில சம்பவங்கள் மற்றும் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டோம்.
இதைப்போல ஏராளமான நிகழ்வுகளை நாம் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தால் காண இயலும்.
நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு நல்ல கணவராக திகழ்ந்தார்கள்! அவர்களின் வாழ்க்கை நம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரி அல்லவா?
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza