Monday, August 6, 2012

உலகம் நடுங்கிய தினம்!

உலகம் நடுங்கிய தினம்!
அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.

ஹிரோஷிமாவின் 800 அடி உயரத்தில் லிட்டில் பாய் அதிபயங்கரமாக வெடித்து சிதறியது. சின்னப் பையன்(லிட்டில் பாய்) ஒரு பெரும் பயங்கரவாதியாக மாற அதிக நேரம் தேவைப்படவில்லை. கறுப்பான மலை போன்ற மேகத்தின் படலம் ஹிரோஷிமாவை சூழ்ந்தது. ஒரு சில நிமிடங்களிலேயே ஜப்பானின் ஒரு சிறு நகரம் எரிந்து சாம்பலானது. ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போல் இருந்தது அச்சம்பவம். என்ன நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்ளும் முன்பே பலருடைய உயிரும் உடலில் இருந்து பிரிந்து விட்டது. எரிந்து போன நகரத்தின் பாதி வெந்த உடலுடன் காணப்பட்ட சிலர் மரண வேதனையுடன் அங்குமிங்கும் ஓடினர். தீக்காயத்தில் தோல்கள் உருகிய உடலுடன் ஓடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறு குழந்தைகள் தாகத்தால் “தண்ணீர்! தண்ணீர்!” என கதறினார்கள். தீக்காயம் ஏற்படுத்திய வேதனையை சகிக்க முடியாமல் ஒடா நதியில் குதித்தனர். ஆனால், அந்த நதியோ அணுகுண்டு வெளியிட்ட வெப்பத்தால் கொதித்துக் கொண்டிருந்தது. நதியில் குதித்தவர்கள் உடல் வெந்து மரணித்தனர். கிட்டத்தட்ட 90 ஆயிரம் முதல் 1.66,000 பேர் ஹிரோஷிமாவில் இறந்து போயினர்.
அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்திய பின்விளைவுகளால் பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஹிரோஷிமாவில் பலியாகினர். உலகம் சாட்சியம் வகித்த முதல் அணு குண்டு துயரமாக ஹிரோஷிமா மாறியது.
மன்ஹாட்டன் ப்ராஜக்ட்!
1942-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப்போர் நிகழ்ந்த காலக்கட்டத்தில் அணுகுண்டை தயாரிக்க கனடா மற்றும் பிரிட்டனின் துணையுடன் அமெரிக்கா நடைமுறைப்படுத்திய திட்டம் தான் மன்ஹாட்டன் ப்ராஜக்ட்.
அமெரிக்க ஆர்மி எஞ்சீனியரிங் தலைவர் மேஜர் ஜெனரல் லெஸ்ஸி க்ரோவ்ஸின் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டெவலப்மெண்ட் ஆஃப் ஸப்ஸ்ட்யூட் மெட்டீரியல்ஸ் என்ற சங்கேத பெயரில் மன்ஹாட்டன் மாவட்டத்தில் நடந்து வந்த இந்த ஆராய்ச்சி பின்னர் மன்ஹாட்டன் ப்ராஜக்ட் என அழைக்கப்பட்டது. 1939-ஆம் ஆண்டு இத்திட்டம் துவக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 25.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமான தொகை இத்திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டது.
1939-ஆம் ஆண்டு 2-ஆம் உலகப்போரின் ஆரம்ப நாட்களில் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்டிற்கு எழுதிய கடிதத்தில் இருந்து அணுகுண்டை குறித்த ஆய்வு துவங்கியது.
“ப்ளூட்டோனியம் மற்றும் யுரேனியத்தின் ஐஸோடோபான யுரேனியம் 235 சுத்திகரித்து புதிய ரக குண்டை தயாரிக்க ஜெர்மனி நாஸிக்கள் திட்டமிட்டுள்ளனர்” என்பது ஐன்ஸ்டீனின் எழுதிய கடிதத்தின் உள்ளடக்கம் ஆகும். இது தொடர்பாக பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோ ஸிலாண்ட் ஐன்ஸ்டீனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அணு குண்டு தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய அமெரிக்கா, மன்ஹாட்டன் ப்ராஜக்டை துவக்கியது.
அணுகுண்டு தயாரிப்பில் உள்ள செயின் ரியாக்சனுக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் 235-ஐ தனியாக பிரித்தெடுப்பது அன்றைய விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலாகா மாறியது. அக்காலத்தில் யுரேனியம் 235-ஐ பிரித்தெடுக்க விஞ்ஞானிகளால் முடிந்தது எனினும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைத்தது. பின்னர் அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கிடைப்பதற்காக ஓக்ரட்ஜில் ஒரு பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பிரித்தெடுக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஹரோல்ட் சி உரேயும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் எர்னஸ்ட் ஒ லாரன்சும் நவீன வழிகளை கடைப்பிடித்ததன் மூலம் திட்டப்பணிகள் வேகமாக நடந்தேறின.
ஆறு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சியின் முடிவில் திட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை தலைமை தாங்கிய ராபர்ட் ஓபன் ஹைமரின் மேற்பார்வையில் 1945-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி காலை 5.29 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஜெமஸ் மலைக் குன்றுகளில்  தா காட்ஜட் என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்ட அணுகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அணுகுண்டு சோதனையின் தீவிரத்தை 120 மைல்களுக்கு அப்பால் இருந்த மக்களும் உணர்ந்தனர். முதல் அணுகுண்டு சோதனையின் தீவிரத்தை கண்டறிந்த நாட்டு மக்கள், பீதிவயப்பட்டனர். பின்னர், இத்தகைய பரிசோதனைகள் தங்களுடைய பகுதிகளில் நடத்தக் கூடாது என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
லிட்டில் பாய்
ஹிரோஷிமாவில் நடந்த மனித குல கோரப் படுகொலைக்கு காரணமான அணுகுண்டின் பெயர்தாம் லிட்டில் பாய்.
இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மன்ஹாட்டன் ப்ராஜக்ட் மூலம் லிட்டில் பாய் தயாரிக்கப்பட்டது. ப்ராஜக்ட் இயக்குநர் ராபர்ட் ஓபன் ஹைமரின் சீடரான ராபர் ஸெர்பர்தாம் அன்று தயாரித்த மூன்று குண்டுகளுக்கும் பெயரிட்டார். செறியூட்டப்பட்ட யுரேனியம் 235-இன் நியூக்ளியர் ஃபிஸன் மூலமாகத்தான் அணுக்குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 16 டன் டி.என்.டி வெடிப்பொருளின் சக்தியுடன் வெடிக்கும் இதன் பாதிப்பு மிக மிக கடுமையானது. கிட்டத்தட்ட 300 செ.மீ நீளம், 71 செ.மீ அகலம், 4400 கிலோ கிராம் எடை ஆகியன லிட்டில் பாயின் தனித்தன்மையாகும். நியூக்ளியர் செயின் ரியாக்சன் மூலமாக குண்டு வெடிக்கிறது. குண்டில் அடங்கியிருக்கும் 64 கிலோ கிராம் யுரேனியம் நியூக்ளியர் ஃபிஸனுக்கு ஆளாகும் பொழுது வெளியிடப்படும் எரிபொருளின் வெப்பமும், ஒளியும் இணைந்து பயங்கரமாக வெடித்து சிதறல் உருவாகிறது.
ஃபேட்மேன்
நாகஸாகியை தகர்த்தது ஃபாட்மான்(குண்டு மனிதன்) அணுகுண்டு ஆகும்.
இங்கு 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். நாகஸாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் 18 கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் மாறியது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது.
ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது. செப்டம்பரில் 3 குண்டுகளையும், அக்டோபரில் 3 குண்டுகளையும் அமெரிக்கா ஜப்பான் மீது வீச தயாராக இருந்ததாகவும், ஆனால் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் இந்த குண்டுகளை வீச இயலாது என உயர் இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் சூழல் மாறியதன் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹிபாகுஷா
ஜப்பானிய மொழியில் ஹிபாக்குஷா என்றால் அழிந்தும் உயிர் வாழ்பவர்கள் என பொருள். உலகில் அது வரை எங்கும் உபயோகிக்காத குண்டுகள் நாகஸாகியிலும், ஹிரோஷிமாவிலும் உபயோகிக்கப்பட்டது. அதிக அளவில் அணுக்கதிர்கள் வெளியாகி எதிர்கால தலைமுறையினருக்கும் கொடிய நோய்களை உருவாக்குகிறது.
1,66,000 பேர் மரணித்ததாக புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டாலும், அணுக் கதிர்வீச்சால்(ரேடியேசன்) பிற்காலத்தில் அதிகமான நபர்கள் மரணித்தனர். 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை, கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.
இந்த அணுகுண்டுகளை வீசியதால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா தனது மாபாதக செயலை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டது.
அமெரிக்காவின் கொடூரம் இத்தோடு நிற்கவில்லை. ஈராக்கில் சதாம் ஹுஸைன் பேரழிவு ஆயுதங்களை சேகரித்து வைத்துள்ளார் என அவதூறாக குற்றம் சாட்டி கொத்துக் குண்டுகளையும், இன்னும் பல கொடிய வெடிக்குண்டுகளையும் வீசி குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜூனியர் புஷ் கூறிய விளக்கம், கடவுள் எனக்கு கட்டளையிட்டார் என்பதாகும். இன்றும் ஈராக்கில் வெடிக்குண்டு சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலின் குற்றத்தை உஸாமா பின் லேடன் மீது சுமத்தி ஆப்கானிஸ்தானை இரத்தக் களறியாக மாற்றியது அமெரிக்கா. இன்று வரை அங்கு அமைதி மீண்டும் திரும்பவில்லை. ஆளில்லா விமானங்கள் மூலம் கோழைத்தனமாக பாகிஸ்தான், ஆஃப்கானில் உள்ள பழங்குடியினரை கொடூரமாக கொலைச் செய்து வரும் அமெரிக்கா, அதற்கு கூறும் காரணம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதாகும்.
தற்பொழுது அணுகுண்டை தயாரிக்கிறார்கள் என குற்றம் சாட்டி ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக மேற்காசியாவின் பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருகிறது அமெரிக்கா.
ஜனநாயகத்தின் அப்போஸ்தலராக, உலக போலீஸ்காரராக நாடகமாடி அமெரிக்கா செய்துவரும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. மனிதகுல விரோதிகள் தாம் இன்று மனிதநேயத்தின் காவலர்களாக வேடம் பூண்டுள்ளார்கள் என்பதை நாம் இத்தினத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.
அ.செய்யது அலீ

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza