Monday, August 6, 2012

இனிக்கும் இல்லறம் -11

இனிக்கும்இல்லறம்1
சந்தேகம் – இல்லறத்தின் சந்தோஷத்தையே கெடுக்கும் நோய். அன்பு, பாசம், அரவணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை இவற்றால் கட்டியெழுப்பிய இல்லறம் என்ற வீட்டில் சந்தேக நோய் புகுந்துவிட்டால் விபரீத விளைவுகளை உருவாக்கிவிடும்.
கணவன் – மனைவி இடையேயான நம்பிக்கைதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சந்தேகம் குறித்து ஒரு கதையின் ஊடே நாம் புரிந்துகொள்வோம்.
தன்ஸீரா-முஸஃபர் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான தம்பதியினர். அவர்களிடையே எழுந்த பிரச்சனையின் காரணத்தையும் அதற்கான தீர்வையும் பார்ப்போம்.

தன்ஸீரா கூறுகிறார்: ஆறுமாதம் முன்புதான் நான் கவனிக்கத் துவங்கினேன். எனது கணவர், வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தை விட தாமதமாகவே வரத் துவங்கினார். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. காரணம் என்னுடன் தனிமையில் செலவிட அவர் இதர நேரங்களை கண்டறிந்தார். விலைமதிப்புமிக்க பரிசுகளை அளித்து என்னை மகிழ்விப்பதிலும் அவர் குறை வைக்கவில்லை. அவருக்கு ஓவர்டைம் வேலையாக இருக்கலாம். இதுதான் அவர் தாமதமாக  வர காரணம் என்று நான் எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன்.
ஒரு நாள் அவர் தூங்க சென்ற நேரம் பார்த்து எனது சிறிய மகள் அவருடைய மொபைல் ஃபோனை எடுத்து விளையாடிக் கொண்டிந்தாள். காதலை வெளிப்படுத்தும் ஒரு குறுஞ்செய்தியை அதில் கண்ட அவள் அதனை என்னிடம் காட்டுவதற்காக சிரித்தவாறு ஓடிவந்தாள். அச்செய்தியை நான் அனுப்பியதாக அவள் எண்ணிக் கொண்டாள். நான் அவளிடமிருந்து மொபைலை வாங்கி அச்செய்தியை படித்து அதிர்ச்சியடைந்தேன்.
நான் இவ்வாறு ஒரு செய்தியை அனுப்பவில்லையே. யார் இந்த செய்தியை அனுப்பினார்? அவ்வாறெனில் எனது கணவருக்கு வேறு ஏதோ பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா? உள்ளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் நான் கீழே விழுந்து விடுவேனோ என நினைத்தேன். என்னச்செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. எனது நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. இருந்தாலும் நான் எனது கெளரவத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.
மனநிலை பாதிப்பட்டவளைப் போல அவர் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தேன். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பிய பிறகு மொபைல் ஃபோனில் வந்த செய்தியை காட்டி யார் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பினார்? என்று கேட்டேன். சிறிது நேரம் எனது செயலை கண்டு அதிர்ச்சியடைந்த எனது கணவர் என்னவென்று புரியாமல் விழித்தார். பின்னர் நான் கூறுவதுபோல எதுவும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்து கூறினார்.
“தவறுதலாக மொபைலில் வந்த செய்தியாக இருக்கலாம். இவ்வாறு பல வேளைகளில் நிகழ்வதுண்டு. சந்தேகிக்க இதில் ஒன்றுமில்லை. இதற்கு முரணாக சிந்திப்பது ஷைத்தானின் வழியாகும். அவனுடைய வழியில் சென்றால் நமது அன்பான இல்லற வாழ்க்கை சீர்குலைந்துவிடும்” என்ற எனது கணவரின் அறிவுறுத்தல் எனது மூளையில் பதியவில்லை.
எங்களிடையே நடக்கும் உரையாடலை எனது மகள் லைவாக பார்த்துக் கொண்டிருந்தாள். என்னை சமாதானப்படுத்த எனது கணவர் படாதபாடுபட்டார். நான் எதனையும் பொருட்படுத்தவில்லை. என் அருகில் வரவும் அவரை நான் அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் என் கணவர் என்னிடம், “நீ நார்மலாகும் வரை நான் வெளியே போய்விட்டு வருகிறேன்” என்றார். நான் தாமதிக்காமல் முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினேன், ‘வெளியே ஒருத்தி இருக்கிறாளே. அவளிடம்தானே செல்கின்றீர்கள்?’ “சரி நான் எங்கேயும் போகவில்லை! உனக்கு மனோ பிரம்மை பிடித்துள்ளது. என்ன சொன்னாலும் புரியாது. நீயே தானாக புரிந்துகொள்!’ என்று கூறிவிட்டு படுத்துக்கொண்டார்.
நான் எனது படுக்கையை மாற்றினேன். மறுநாள் மீண்டும் என்னருகில் தேனில் குளைத்த வார்த்தைகளுடனும், எனக்கு பிடித்த பொருட்களையும் வாங்கிகொண்டு வந்தார். நான் அதனை கவனிக்கவே இல்லை. வீட்டின் நிலைமை அலங்கோலமானது. அவரை நான் கவனிப்பதே இல்லை. அவர் வீட்டிற்கு மேலும் தாமதித்து வந்தார். சில நாட்கள் வீட்டிற்கு வருவதில்லை. காரியம் எனது கையை விட்டு நழுவுவது போல் உணர்ந்தேன்.
ஒரு நாள் வீட்டிற்கு வந்த அவரிடம் நேரடியாகவே கேட்டேன். ‘வேறு ஏதேனும் பெண்ணுடன் தொடர்பிருந்தால் அதனை உடனே முறிக்கவேண்டும். (அவர் இறைவனுக்கு அஞ்சி நடப்பவர் என்பதால் இத்தவறை செய்திருக்கமாட்டார் என்று நான் நம்பினேன்.)நீங்கள் அவளை திருமணம் செய்திருந்தால் உடனே தலாக் சொல்ல வேண்டும். அவ்வாறெனில் நாம் பழைய சந்தோஷமான வாழ்க்கைக்கு திரும்பலாம். இல்லாவிட்டால் நீங்கள் என்னை தலாக் சொல்லவேண்டிய சூழல் உருவாகும். எனது காயமுற்ற நம்பிக்கையை பாதுகாக்க வேறொரு வழியும் எனக்கு தெரியவில்லை.
அவருடைய பதிலுக்காக காத்திருந்தேன். இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. நான் செய்தது சரிதானா?
பதில்:சகோதரி அவர்களின் இச்செயல் தனக்கும், தனது இல்லற வாழ்க்கைக்கும் ஊறுவிளைவிப்பதாகவே அமைந்துள்ளது. குழந்தைகளிடமும் இத்தகைய செயல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். கணவர் மற்றும் குழந்தைகளுடனான கனவு வாழ்க்கையை இவரது செயல் தகர்த்துவிட்டது என்றே கூறலாம். இவருக்கும், இவரைப் போன்ற குடும்ப பெண்களுக்கும் இதிலிருந்து அநேக பாடங்களை பெறமுடியும்.
வீட்டிற்கு தாமதமாக வரும் கணவன், அதற்கு பிராயச்சித்தமாக வேறு நேரங்களை கண்டறிந்து மனைவியையும், குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தியுள்ளார். இவ்வேளையில் ஒரு குறுஞ்செய்தி மொபைலில் வருகிறது. இச்செய்தி தவறுதலாக கணவனுடைய மொபைல் ஃபோனில் வந்திருக்கலாம். அல்லது இதைப்போல பிறரின் வாழ்க்கையை பாழாக்குவதற்கே சிலர் சமூகத்தில் விஷச் செடிகளாக முளைத்துள்ளார்களே, அவர்களுடைய செய்கையாகவும் இருக்கலாம். இதனைப் புரிந்துகொண்டு சமயோஜிதத்துடன் நடந்துக்கொள்ளுவதே சிறந்த குடும்ப பெண்மணியின் அழகாகும்.
மகளுக்கு முன்னர் வைத்து அவளுடைய தந்தையை மோசமாக சித்தரித்தது நிச்சயமாக தவறான செயலாகும். இச்செயல் மூலம் மகளின் உள்ளத்தில் தந்தையை குறித்த தவறான சித்திரம் உருவாகியிருக்கும். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும், அவர்களது தந்தையே முன்மாதிரியாக திகழ்வார். அது மாய்க்கப்பட்டுவிடும்.
மேலும் இத்தகைய பிரச்சனைகள் உருவாகும் வேளையில் ஆவேசமடைந்து களேபரத்தை உருவாக்கலாம் என்றும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். மேலும் ஒரு விஷயத்தைக் குறித்து தேவையில்லாமல் துருவி துருவி விசாரிக்கலாம் என்பதையும் உங்களின் செயல்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.
கணவனை குறித்து நீங்கள் மோசமாக கருதுகின்றீர்கள் என்பது இச்சம்பவத்தில் இருந்து தெரியவருகிறது. அவ்வாறெனில், இவ்வளவு நாட்களும் இருவரும் பழகியதெல்லாம் வெறும் போலித்தனமா? தன்னம்பிக்கையின் குறைபாடே இத்தகைய மனோபாவத்தை உருவாக்குகிறது. இது பிறர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த தூண்டுகிறது.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களில் துருவி துருவி விசாரிக்க கூடாது என்று திருக்குர்ஆன் போதிக்கிறது. முன்மாதிரியான குடும்ப பெண்மணி ஷைத்தானின் தூண்டுதலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள அல்லாஹ்விடம் எப்பொழுதும் காவல் தேடவேண்டும். அதேவேளையில் தீயவர்களிடமிருந்து ஒரு செய்தி வந்தால் உண்மை நிலையை அறிய நல்லெண்ணத்துடன் அதனை தீர விசாரித்துக் கொள்ளவும் திருக்குர்ஆன் நமக்கு போதிக்கிறது. எதையும் உடனே நம்பிவிடும் போக்கை கைவிடவேண்டும்.
இங்கு செய்தியை அனுப்பியது யார் என்பதில் தெளிவில்லை. இல்லற வாழ்க்கையை சீர்குலைக்க சில புல்லுருவிகள் இத்தகைய செயலை புரியலாம். மேலும்  பிள்ளைகள் முன்பாக அல்லாமல் தனியாக கணவனிடம் இதுக்குறித்து விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் நமது மனதை ஆறுதல் படுத்துவதற்காக சில காரியங்களை கண்மூடித்தனமாக செய்துவிடுகிறோம். ஆனால், இதன் மூலம் அழகான இல்லற வாழ்வு தகர்ந்துபோகிறது.
கணவன் 2-வதாக ஒருவரை திருமணம் புரிவதைக் குறித்து உங்களிடம் கூறியிருக்க வேண்டும். அல்லது நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்க வேண்டும். இதுவல்லாத வேறு வழிகள் மூலமாக வரும் செய்தியை நம்பி நமது வாழ்க்கையை நாமே பாழடித்து விடக்கூடாது.
இல்லற வாழ்க்கையில் சந்தேகத்திற்கு சற்றும் இடம் கொடுக்காமல் பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடருங்கள் தவறுக்கு கணவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.
இல்லறம் என்பது முழுக்க முழுக்க உணர்வுகளால் பின்னப்பட்ட வலை. இதில் ஒரு இழை அறுந்துவிட்டாலும் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஆட்டம் கண்டுவிடும். உணர்வுகளை முழுமையாக புரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை சீர்குலைந்துவிடும்.
சந்தேகம் நம்பிக்கையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகும். அது ஒரு நோய். அதனை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் பிறகு நாம் வருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.
நபி(ஸல்…) அவர்கள் கூறினார்கள்: “சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.” (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தொடரும் இன்ஷா அல்லாஹ்…
அ.செய்யதுஅலீ

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza