Tuesday, November 8, 2011

அன்னா ஹஸாரேயை அவரது குழுவினர் பலிகடா ஆக்குகிறார்கள்-திக்விஜய்சிங்

digvijay-singh
புதுடெல்லி:அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் மீது மீண்டும் குற்றச்சாட்டுக்களை தொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங்.அரசியல் ஆதாயங்களுக்காக அவரது குழுவினர் ஹஸாரேயை பலிகடா ஆக்குகிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திக்விஜய்சிங் கூறியதாவது:ஹஸாரேவுக்கும், காங்கிரசுக்கும் ஊழலை குறித்த ஒரே கருத்துதான் உள்ளது. ஆனால், ஹஸாரேயின் எளிமையை பயன்படுத்தி அவரது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திசாலிகள், தங்களின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக ஹசாரேவை முகமூடியாகவும், பலிகடாவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

குழுவினரின் நெருக்கடி காரணமாக தனது நிலைப்பாட்டை ஹஸாரே அடிக்கடி மாற்றிக் கொண்டு வருகிறார். ஜனலோக் பால் விவகாரத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் எதிராக பிரசாரம் செய்யப் போவதில்லை என கூறி வந்தார். ஆனால் குழுவினரின் நெருக்கடி காரணமாக இப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக ஹஸாரே கூறி வருகிறார்.

ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு மூளையாகவும் செயல்வடிவமும் கொடுத்து இயக்கிவருவது ஆர்.எஸ்.எஸ்.தான் என்பதை ஏன் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயங்குகிறார் என்பதுதான் தெரியவில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கான ஆதரவு மேடையில் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்தவுக்கு நீதிபதி நியமிக்காத குஜராத் முதல்வர் மோடியை ஹஸாரே பாராட்டியதன் மூலம் அவர் இரட்டை வேடம் போடுகிறார். பாபா ராம் தேவ் சில நோக்கங்களுக்காகவே உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார். ராம் தேவ் பொய் கூறும் வேளையில் ஹஸாரே உண்மையை கூறுகிறார்.

ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்காக நான் வருத்தப்படவில்லை. தொடர்ந்து அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறுவேன். ஹஸாரேவை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயன்படுத்தி வருவதை ஹஸாரே இன்னும் உணரவில்லை. அவர்களின் சொல்படி நடந்தால் அவருக்கு பாதிப்பு பலமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக ஹஸாரே தெரிவித்துள்ளார். இதிலும் அவர் பின்வாங்கலாம்.

ஹஸாரே இயக்கத்துக்கு வந்த நன்கொடைகள் திருப்பி அளிக்கப்படும் விவகாரத்தில், அரவிந்த் கேஜரிவாலின் கணக்கு புலமை எனக்குப் புரியவில்லை. இந்திய வருவாய்துறை அதிகாரியான அவர் தெரியாதவர்களிடம் வாங்கியதை தெரியாதவர்களிடமே கொடுக்கிறார். இது எந்த வகை கணக்கு முறை என்பது தெரியவில்லை. வாங்கிய நன்கொடைக்கும் ரசீது இல்லை. கொடுக்கும் பணத்துக்கும் ரசீது இல்லை. இது வெறும் ரூ.42 லட்சமா அல்லது ரூ.42 கோடியா என்பது தெரியாது.

ஹஸாரே மவுன விரதம் இருந்ததே, குழு உறுப்பினர்களின் தேவையற்ற சர்ச்சைகளுக்கு பதிலைத் தவிர்ப்பதற்காகதான். அவர் உண்ணாவிரதம் இருப்பதுதான் வழக்கம். இப்போது தான் முதல் முறையாக மவுன விரதம் இருந்துள்ளார். நான் அவரை கேலிச் செய்வதாகக் கருதக்கூடாது. நான் எப்போதும் உண்மையையே பேசுவதால், அவை சர்ச்சையை உருவாக்கி வருகின்றன. எனது வாழ்நாளில் ஒருமுறைகூட தவறான தகவலையோ, பொய்க்குற்றச்சாட்டையோ கூறியதில்லை. இருந்தபோதும் எனது கருத்துகள் ஏன் சர்ச்சையை உண்டுபண்ணுகின்றன என்பதுதான் தெரியவில்லை.

ஊழல், கறுப்புப்பணம்,பணவீக்கம் ஆகிய விஷயங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மவுனம் காக்கிறார் என்று குற்றம்சாட்டும் பாஜக தலைவர் அத்வானிக்கு வயது மூப்பின் காரணமாக வரும் நினைவுதிறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி ஊழலுக்கு எதிராகப் பேசியுள்ளதை அவர் மறந்துவிட்டார். இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza