டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பு போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிரியாவின் கொடுங்கோலன் பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவம் நடத்திய மனித வேட்டை இரத்தக் களரியாக மாறியது. நேற்று முன் தினம் எதிர்ப்பாளர்களையும், எதிரணி ராணுவத்தினரையும் கைது செய்ய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் நாற்பது பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொல்லப்பட்டனர்.
டமாஸ்கஸ், தைர்ரஸ்ஸவ்ர், இத்லிப், ஹமா, ஹும்ஸ் ஆகிய இடங்களில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஹும்ஸில் கொல்லப்பட்டவர்களில் எட்டு வயதான சிறுமியும் அடங்குவார். தைர்ரஸ்ஸவ்ரிலும், மாரத்துல் நுஃமானிலும் ராணுவமும், எதிர் தரப்பு ராணுவத்தினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். ஐந்து ராணுவத்தினர் இம்மோதலில் கொல்லப்பட்டனர்.
ஆஸாதின் அரசு சிவிலியன்களை திட்டமிட்டு கொலைச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. ஹும்ஸில் சிரிய ராணுவம் மனித இனத்திற்கு எதிரான குற்றத்தை செய்ததாகவும், அரபு லீக்கிலிருந்து சிரியாவை வெளியேற்ற வேண்டும் எனவும் இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஹும்ஸில் 110 பேரிடம் நடத்திய பேட்டியில் நகரத்தில் ராணுவம் நடத்திய திட்டமிட்ட கூட்டுப்படுகொலை குறித்த தகவல் கிடைத்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.
எட்டு மாதங்களாக ஆஸாத் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் 3500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவைச் சார்ந்த மனித உரிமை அமைப்பு நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நகரங்களிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறவும், அரசியல் சிறைக் கைதிகளை விடுதலைச் செய்யவும் எதிர்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சிரியா அரபு லீக்குடன் இம்மாதம் துவக்கத்தில் ஒப்பந்தம் செய்தது. ஆனால், இதற்கு மாற்றமாக தற்பொழுது சிவிலியன்களை கொலைச்செய்து வருகிறது.
அதேவேளையில், வெளிநாட்டு ராணுவத்தின் தலையீடு தேவையா? அல்லது ஆஸாத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? என்பது குறித்து எதிர் தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டிக்கும், சிரியா தேசிய குழுவிற்கும் இவ்விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இரு பிரிவு தலைவர்களும் அரபு லீக்கின் தலைவர் நபீல் அல் அரபியுடன் நேற்று கெய்ரோவில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment