புதுடெல்லி:விசாரணை இல்லாமல் ஏராளமான பாகிஸ்தான் குடிமக்கள் நீண்டகாலமாக இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தனது அதிர்ச்சியை வெளியிட்ட உச்சநீதிமன்றம் இதுத்தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஆர்.எம்.லோடா தலைமையிலான பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நான்கு பெண்கள் உள்ளிட்ட சிறைக் கைதிகளை சொந்த நாட்டிற்கு அனுப்பாததன் காரணம் என்ன? என்ற கேள்விக்கு காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட பாக்.கைதிகளை விடுதலைச் செய்யவேண்டும் என கோரி ஜம்மு கஷ்மீர் பேந்தர்ஸ் கட்சியின் தலைவர் பீம் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. பல ஆண்டுகளாக விசாரணை கூட இல்லாமல் சிறையில் ஏராளமான பாகிஸ்தான் குடிமக்கள் அடைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என பீம் சிங் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டுவாரத்திற்கு பிறகு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறைக் கைதிகளுக்காக பீம் சிங் தாக்கல் செய்துள்ள மூன்று வெவ்வேறு மனுக்களில் 752 பாகிஸ்தானியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 205 பேர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றனர். 318 பேர் வழக்கறிஞர்களின் சேவையை எதிர்பார்த்தும், 205 பேர் குடியுரிமையை உறுதிச் செய்வதற்காகவும் காத்திருப்பதாக அம்மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டனை முடிவடைந்த 61 கைதிகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இவர்களில் 57 பேரை விடுதலைச் செய்ததாக மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment